Our Feeds


Sunday, May 19, 2024

SHAHNI RAMEES

புத்தளத்தில் வெள்ளம் - மக்கள் பரிதவிப்பு

 



தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம்

மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.




இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .




புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன், தில்லையடி, ரத்மல்யாய , பாலாவி ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கின.




மேலும், நாத்தாண்டிய, முந்தல், கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களும் , விவசாய நிலங்களும் இவ்வாறு வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட அலுவலகத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.




அத்துடன், தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக சிறிய குளங்களும், ஆறுகளும் நிரம்பி அங்கு நீர் மேவிப்பாய்வதாகவும் கூறப்படுகிறது.




இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக புத்தளம் - பழைய மன்னார் வீதியின் எலுவங்குளம் பகுதியில் உள்ள சப்பாத்து பாலத்திற்கு மேல் வெள்ளநீர் மேவிப்பாய்கிறது.




இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.




இதன்படி இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 2 அடி உயரத்திலும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 3 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.




இதனால், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1050 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1800 கன அடி நீரும் வெளியேறுவதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.




ரஸீன் ரஸ்மின்




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »