Our Feeds


Thursday, May 23, 2024

Zameera

பொது நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை முன்வைத்தமை வரலாற்றுச் சாதனை - அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய


 (எம்.ஆர்.எம். வசீம். இராஜதுரை ஹஷான்)

பொது நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை முன்வைத்தமை வரலாற்றுச் சாதனை. இது சுதந்திர இலங்கையின் 76 வருடங்களில் அரசாங்கம் எடுத்த மிக முக்கியமான தீர்மானம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) எதிர்க்கட்சியினால்  பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்அங்கு மேலும் தெரிவிக்கையில்,  

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் இலங்கையிடம் இருந்து இரண்டு தசாப்தங்களாக விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவது என இதனை அழைக்க முடியும் .திறைசேரி செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இந்த வரைவில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.திறைசேரி  செயலாளர் மற்றும் தலைமைக் கணக்காய்வு அதிகாரியின் அதிகாரங்கள் சரியாக வரையறுக்கப்படாதது நெருக்கடிக்கு வழிவகுத்தது.  

இதற்கு மேலதிகமாக, குறித்த சட்டத்தின் ஊடாக சொத்துக்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமையும் மக்களுக்கு கிடைக்கும் .எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நாட்டில் முறையான நிதி முகாமைத்துவத்தை உருவாக்குவதற்கு வேறு அரசாங்கங்கள் நியமிக்கப்பட வேண்டிய அவசியமில்லை .

இதேவேளை, சீனி வரி மோசடியினால் இழந்த வரி வருமானத்தில் சுமார் 500 மில்லியன் ரூபாவை வருமான வரியாக அறவிட முடிந்துள்ளது.சீனி வரி மோசடி மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 17 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், சீனி இறக்குமதி நிறுவனங்களால் வருமான வரி மூலம் அரசாங்கத்திற்கு இழந்த பணத்தில் சிலவற்றை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்படும்  என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »