Our Feeds


Tuesday, May 21, 2024

ShortNews Admin

மனோ எம்பி - சுவிட்சர்லாந்து தூதுவருக்கிடையில் சந்திப்பு

 

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பியை, சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி திருமதி சிரி வோல்ட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 

மனோ எம்.பியின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தின் அரசியல் துறை முதலாம் செயலாளர் செல்வி ஜஸ்டின் பொய்லாவும் கலந்து கொண்டார்.

 

இது தொடர்பில் மனோ எம்.பி தனது எக்ஸ்-தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

 

நல்லிணக்கம், பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, மலையக சமூகத்தை சார்ந்த பெருந்தோட்ட பிரிவினரின் வாழ் நிலைமை ஆகியவை பற்றி சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட், அரசியல் துறை முதலாம் செயலாளர் ஜஸ்டின் பொய்லா ஆகியோரும், நானும் மிக விரிவாக உரையாடினோம். 

 

உண்மை, ஐக்கியம், நல்லிணக்கம் பற்றிய மசோதா மூலம் அரசு கொண்டுவர முயலும் உண்மை ஆணைக்குழு பற்றி பேசினோம். ஆனால், அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எவ்வித அர்த்தபூர்வ முன்நகர்வும் அரசாங்க தரப்பில் செய்யப்படாத காரணத்தால், நல்லிணக்கம் இன்னமும் சாத்தியம் ஆகவில்லை. இவை இத்தனை தூரம் இழுப்பட்டு போவதற்கு சர்வதேச சமூகமும் காரணமாக அமைந்து விட்டது. ஆகவே இலங்கை தொடர்பான இதுவரையிலான உலக சமுதாய கொள்கைகளை மீளாய்வு செய்யுங்கள் என நான் கோரியுள்ளேன்.

 

மேலும் மலையக தமிழ் மக்கள் இந்நாட்டில், இந்நாள் வரை இழந்த அரசியல் சமூக உரிமைகளை மீளப்பெற சுவிட்சர்லாந்து எமக்கு உதவ வேண்டும். மலையக தமிழர் இந்நாட்டில் சுமார் 12 மாவட்டங்களில் பரந்து வாழும் சிறுபான்மையினர் என்ற படியால், அரசியல் யாப்பு ஏற்பாடாக நிலவரம்பற்ற சமுக சபை அமைக்கப்பட வேண்டும் என நாம் முன்மொழிவு செய்து வருகிறோம்.

 

இந்த எமது முன்மொழிவுகள் செம்மையாக்கப்பட வேண்டும். அதற்காக, சுவிட்சர்லாந்து நாட்டின் நிலவரம்பற்ற சிறுபான்மையினருக்கு வழங்கபட்டுள்ள அதிகார பகிர்வு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நாம் விரும்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »