Our Feeds


Saturday, May 11, 2024

ShortNews Admin

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய பொறிமுறை




 பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும் வகையில் அரசாங்கம் இரண்டு சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குறித்த சட்டமூலங்களை வரும் ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் மூலம், ஆண் பெண் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் தொடர்பான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்தல், பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவை நிறுவுதல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை ஸ்தாபித்தல் மற்றும் பெண்கள் உரிமைகள் மீறப்படுதல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான “உலகளாவிய வன்கொடுமை எதிர்ப்பு சைகைகள்” 3 கை முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று(10) கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் DP Education ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெண்களுக்கு நிகழும் வன்முறைகளுக்கு எதிராக சைகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருகிறோம். பெண்களுக்கு எதிரான வன்முறையை எப்படி நிறுத்துவது என்பதை இந்த கை சமிக்ஞைகள் தெரிவிக்கும். பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். அதை வார்த்தைகளுக்குள் மட்டுப்படுத்த முடியாது. இந்தச் சைகைகள் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சமூகம் உணர்ந்து அதற்கு எதிராகப் போராட முடியும்.

பெண்கள் உரிமை பாதுகாப்பு ஆணைக்குழு ஒன்றும் நிறுவப்படவுள்ளது. எந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தாலும் அதற்கான தீர்வுகளை ஆணைக்குழு வழங்கும்.

மேலும், கல்வித் துறையில் பெண்கள் மிகவும் வெற்றிகரமானவர்களாக மாறி வருகின்றனர். பெண்களுக்கு முன்னாலிருக்கும் தடைகளை நீக்க வேண்டியது நமது பொறுப்பாகும். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மன்றம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் இது சார்ந்த பொறுப்புகள் உள்ளன. பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்த்து சமூக நீதியை நிலைநாட்டவே நாங்கள் பாடுபடுகிறோம்.

இரண்டு சட்டங்களையும் ஜூன் மாதம் நிறைவேற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் நான் ஏற்கனவே பிரதமருடன் கலந்துரையாடியுள்ளேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 25% ஆக அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்துடன், மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்.

மேலும், பெண்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். 2030 ஆம் ஆண்டுக்குள் பெண்கள் அரசியல் கட்சியை அங்கீகரிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

இலங்கையில் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் பெண்களுக்கு உரிய அந்தஸ்த்தை வழங்கவும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »