Our Feeds


Sunday, May 19, 2024

SHAHNI RAMEES

மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது சகலரதும் பொறுப்பாகும் - மஹிந்த ராஜபக்ஷ


 யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில்

தற்போது வாழ்கிறோம்.ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள். இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.


15 ஆவது இராணுவ வெற்றியை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,


மூன்று தசாப்தங்களாக இலங்கையை ஆக்கிரமித்திருந்த பிரிவினைவாத, பயங்கரவாத யுத்தம்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டு  15 ஆண்டுகள் பூர்த்தியைடைந்துள்ளன.


1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குழுவாக ஆரம்பமான தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் பிரபல்யமான பயங்கரவாத அமைப்பாக எழுச்சிப் பெற்றது. 


தற்கொலை மனித குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையணி என்பனவற்றை விடுதலை புலிகள் அமைப்பே உலகுக்கு அறிமுகம் செய்தது. தற்கொலை குண்டுகள் அடங்கிய சிறிய ரக படகுகள், இரவு நேரங்களில் தாக்குதல் நடத்த கூடிய இலகு விமானங்கள் உட்பட ஆயுதங்களை கொண்டு வரும் கப்பல்கள் என பலமான கட்டமைப்பில் புலிகள் அமைப்பு செயற்பட்டதை நினைவுகூற வேண்டும்.


இலங்கை மற்றும் இந்திய அரச தலைவர்கள் இருவர் உட்பட இலங்கையின் சிரேஷ்ட அரச தலைவர்கள் மற்றும் சிவில் மக்கள் உள்ளடங்களாக பலரை கொலை செய்த விடுதலை புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு வழிகளில் அழைப்பு விடுத்தேன். சகல வழிகளை நிராகரித்து விடுதலைப் புலிகள் அமைப்பு தாக்குதலை தொடர்ந்ததால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் எதிர் தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்தோம்.


யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.2009.05.18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து 2009.05.19 ஆம் திகதி காலை வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.


நான்காவது ஈழ போராட்டத்தை தோற்கடித்தது மாத்திரமல்ல விடுதலை புலிகள் அமைப்பில் பணயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சக்கணக்கான சிவில் பிரஜைகள் பாதுகாக்கப்பட்டார்கள்.


யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அப்போதைய பாதுகாப்பு பாதுகாப்பு செயலாளர்,பாதுகாப்பு சபையின் பிரதானி,முப்படையின் தளபதிகள்,பொலிஸ்மா அதிபர்,சிவில் பாதுகாப்பு படையணியின் பிரதானிகள்,மற்றும் முப்படையினருக்கும்,நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஐந்தாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி என்ற அடிப்படையில் கௌரவமளிக்கிறேன்.


யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கிறோம். ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள்.இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்த்து வழங்கி நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »