Our Feeds


Saturday, June 15, 2024

Zameera

பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.


 பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

கடந்த  தினம் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின்போதே  இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூடவுள்ளதுடன் காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, காலை 10.30 முதல்  5.00 மணி வரை சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் 2348/38, 2352/47, 2352/48, 2360/62 மற்றும் 2360/63 ஆம் இலக்க விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டுள்ள ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் 2308/27 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் 2373/14 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மாலை 5.00 மணிமுதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஆளும்கட்சி) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மறுநாள் 19 ஆம் திகதி புதன்கிழமை காலை  9.30 மணி முதல் 10.30மணி  வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 10.30 முதல் மாலை 5.00 மணி வரை சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் 2366/33 மற்றும் 2369/42 ஆம் இலக்க விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2381/24 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனையடுத்து 5.00 முதல் 5.30 வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 10.30 முதல்  5.00 மணி வரை கடந்த ஜூன் 4 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »