Our Feeds


Tuesday, June 4, 2024

ShortNews Admin

சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழப்பு ; 130,021 பேர் பாதிப்பு

 

சீரற்ற காலநிலையால்  26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை )  23 மாவட்டங்களில்  உள்ள  33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர்.

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு  116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டன.

அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட  வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »