Our Feeds


Monday, June 3, 2024

ShortNews Admin

பப்புவா நியூ கினியின் சவாலை முறியடித்து வெற்றி பெற்றது மேற்கிந்தியத் தீவுகள்

 

கயானா ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற சி குழுவுக்கான முதலாவது  ரி20 உலகக் கிண்ண  போட்டியில் பப்புவா நியூ கினியை 5 விக்கெட்களால் முன்னாள் உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.

ஆனால், இந்த வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலகுவாக அமையவில்லை. 16ஆவது ஓவர் வரை பப்புவா நியூ கினியிடம் கடும் சவாலை எதிர்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அனுபவசாலிகளான ரொஸ்டன் சேஸ், அண்ட்ரே ரசல் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் மூலம் வெற்றியை ஈட்டிக்கொண்டது.

137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மேற்கிந்தியத் தீவுகள் 1.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 8 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 20 நிமிடங்களுக்கு தடைப்பட்டது.

ஆனால், ஆட்டம் மீணடும் தொடர்ந்தபோது ஓவர்கள் குறைக்கப்படவில்லை. வெற்றி இலக்கும் அப்படியே இருந்தது.

தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் மழையினால் ஆட்டம் தடைப்படலாம் என்ற அச்சம் காரணமாக வேகமாக  ஓட்டங்களைக் குவிக்க விளைந்து 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 2 விக்கெட்களை இழந்தது. (63 - 3 விக்.)

நிக்கலஸ் பூரணும் ப்றெண்டன் கிங்கும் 2ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிக்கலஸ் பூரன் 27 ஓட்டங்களுடனும் ப்றெண்டன் கிங் 34 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து அணித் தலைவர் ரோவ்மன் பவல் (15), ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் (2) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். (97 - 5 விக்.)

எனினும் அனுபவசாலிகளானரொஸ்டன் சேஸ் 27 பந்துகளில் 42 ஓட்டங்களுடனும் அண்ட்றே ரசல் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். 

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் அசாத் வாலா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 28  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பப்புவா நியூ கினி 20 ஓவர்களில் 8 விக்டெக்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது.

ஓமானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்ற 7ஆவது ரி20 உலகக் கிண்ணத்தில் அறிமுகமான பப்புவா நியூ கினி, தனது 2ஆவது முயற்சியின் ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை சிறப்பாக எதிர்கொண்டது.

போட்டியின் ஆரம்பத்தில் மந்தகதியில் ஓட்டங்களைப் பெற்ற பப்புவா நியூ கினி,  முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்வரிசையில் அணித் தலைவர் அசாத் வாலா 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஆனால், அரைச் சதம் குவித்த செசி பவ், சார்ள்ஸ் அமினி, கிப்ளின் டோரிகா, சாட் சோபர் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதன் பலனாக கடைசி 10 ஓவர்களில் பப்புவா நியூ கினி 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து மேலதிகமாக 79 ஓட்டங்களைப் பெற்றது.

செசி பவ் (50), சார்ள்ஸ் அமினி (12) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களைவிட கிப்ளிப் டோரிகா ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றதுடன் சாத் சோபர் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அண்ட்ரே ரசல் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »