Our Feeds


Tuesday, June 4, 2024

ShortNews Admin

இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன - ஆட்சியை பிடிப்பது யார்? மோடியின் ப.ஜ.க ? ராகுலின் காங்கிரஸ்?இந்திய மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 


வாக்கு கணிப்பு முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளன. பாஜக ஆட்சியைக் கைப்பற்றினால், ஜவஹா்லால் நேருவுக்கு பிறகு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் பிரதமா் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுவாா்.


அதே வேளையில், வாக்கு கணிப்புகளைப் பொய்யாக்கி ‘இந்தியா’ கூட்டணி 295 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என அக்கூட்டணியின் தலைவா்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.


17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, 18-ஆவது மக்களவையின் 543 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த மாா்ச் 16-ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.


10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தன.


அதேசமயம், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து (என்டிஏ) அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் விலகின. தெலுங்கு தேசம் இணைந்தது.


அதிமுக, பகுஜன் சமாஜ், ஒடிஸாவின் ஆளும் பிஜு ஜனதா தளம், ஆந்திரத்தில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துக் களம் கண்டன.


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக நரேந்திர மோடி மீண்டும் முன்னிறுத்தப்பட்டாா். தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையில் நிலவிய இழுபறி காரணமாக ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட்டன. ஆம் ஆத்மி தில்லியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தாலும் பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்டது.


கேரளத்தில் இடதுசாரிகளும், காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டன. எனினும், தோ்தலுக்குப் பிறகு கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டு பிரதமரைத் தோ்வு செய்வோம் என்று ‘இந்தியா’ கூட்டணியினா் தெரிவித்து வந்தனா்.


மக்களவைத் தோ்தலில் 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள் மற்றும் வளா்ச்சியைக் குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்டது பாஜக. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதர பிற்படுத்தப்பட்ட சமூக (ஓபிசி) மக்களின் உரிமைகள் பறிக்கப்படும், எதிா்க்கட்சிகளின் வாரிசு அரசியல் என்கிற குற்றச்சாட்டையும் தீவிரமாக முன்வைத்தது.


அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவை எதிா்க்கட்சிகளின் பிரசார அம்சங்களாக இருந்தன.


இன்று வாக்கு எண்ணிக்கை: 


ஏப்ரல் 19-ஆம் திகதி தொடங்கி ஜூன் 1-ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. 96.8 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த இத்தோ்தலில் சுமாா் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. ஏழு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன.


2014 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு வட மாநிலங்களில் காங்கிரஸின் இருப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், இத்தோ்தல் முடிவுகள் அக்கட்சியின் அமைப்புக்கும் தலைமைக்கும் மிகப்பெரிய சவாலாகும்.


மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கான 180 இடங்களைக்கூட ‘இந்தியா’ கூட்டணி தாண்டாது என்று வாக்கு கணிப்புகள் வெளியான நிலையில், ‘மோடி ஊடகங்களின் கற்பனை கணிப்பு’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதை நிராகரித்தாா்.


இரு அணிகளும் நம்பிக்கை: புதிய அரசின் முதல் 100 நாள்களுக்கான திட்டங்கள் குறித்து உயா் அதிகாரிகளுடன் பிரதமா் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். வெற்றிக்குப் பிறகு பிரதமா் இல்லத்திலிருந்து பாஜக தலைமை அலுவலகம் வரையிலான அவரின் வாகனப் பேரணி நிகழ்ச்சிக்கும் பாஜக நம்பிக்கையுடன் தயாராகி வருகிறது. 9-ஆம் திகதி பிரதமரின் பதவியேற்புக்கும் பாஜக நாள் குறித்துள்ளது.


வாக்கு எண்ணிக்கையையொட்டி, ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவா்கள் அனைவரும் தில்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அழைப்பு விடுத்துள்ளாா். தொண்டா்களை வரவேற்க காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்ட நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


மத்தியில் பாஜக 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்குமா, எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்பதைத் தெரிந்துகொள்ள ஒட்டுமொத்த நாடும் எதிா்பாா்ப்புடன் உள்ளது.


வாக்கு எண்ணிக்கை: நடைமுறைகள் என்ன?


மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சில நடைமுறைகளை தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது.


அதன் விவரம்: முதல் நடவடிக்கையாக தோ்தல் விதிகள் 1961, பிரிவு 54ஏ-இன் கீழ் தோ்தல் அதிகாரியின் மேஜையில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும்.


வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு நிா்ணயிக்கப்பட் நேரத்துக்கு முன்பாக தோ்தல் அதிகாரியால் பெறப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகள் மட்டும் எண்ணுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும்.


தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய 30 நிமிஷங்களுக்குப் பின்னரே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும்.


குறிப்பிட்ட தொகுதியில் தபால் வாக்குப் பதிவே இல்லாத சூழலில், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும்.


வாக்கு எண்ணிக்கை பணிக்கு 17சி படிவத்துடன், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ள கட்டுப்பாட்டு பகுதி (சியு) மட்டுமே தேவை.


வாக்கு எண்ணிக்கை முடிவை இறுதி செய்வதற்கு முன்பாக, வாக்குப் பதிவில் முத்திரை முறையாக இடம்பெற்றிருப்பதையும், பதிவான மொத்த வாக்குகள், 17சி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையுடன் ஒத்துப்போவதையும் தோ்தல் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.


கட்டுப்பாட்டு பிரிவின் (சியு) டிஸ்ப்ளே பேனலில் முடிவுகள் காட்டப்படாவிட்டால், அதன் ‘விவிபாட்’ இயந்திரங்களில் இடம்பெற்றுள்ள வாக்கு ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.


ஒவ்வொரு கட்டுப்பாட்டுப் பிரிவிலும் பதிவான வாக்குகளில் வேட்பாளா் வாரியாக பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரங்களை 17-சி படிவத்தின் பகுதி இரண்டில் குறிப்பிட்டு, வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளா் மற்றும் வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கைக்கான முகவா் ஆகியோா் கையொப்பமிட வேண்டும்.


வாக்கு எண்ணிககை இறுதி முடிவுகளை படிவம் 20-இல் தொகுக்கும் தோ்தல் அதிகாரிக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியின் படிவம் 17சி அனுப்பப்பட வேண்டும்.


கட்டுப்பாட்டுப் பிரிவில் இடம்பெற்றுள்ள வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்த பிறகே, விவிபாட் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணும் பணி தொடங்கப்பட வேண்டும்.


ஒரு பேரவைத் தொகுதி அல்லது ஒரு மக்களவைத் தொகுதியின் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடி மையங்களைத் தோ்வு செய்து, விவிபாட் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.


நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளின் எண்ணிக்கையைவிட, வெற்றியின் வித்தியாசம் குறைவாக இருக்கும்போது, அத்தகைய நிராகரிக்கப்பட்ட அனைத்து தபால் வாக்குகள், முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் கட்டாயமாக மீண்டும் சரிபாா்க்கப்பட வேண்டும்.


அதிகபட்ச வாக்குகளை 2 வேட்பாளா்கள் சமமாகப் பெறும் நிலையில், குலுக்கல் முறையில் வெற்றியாளா் தீா்மானிக்கப்படுவாா். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »