Our Feeds


Tuesday, June 4, 2024

ShortNews Admin

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் A/L பெறுபேறுகள் இடை நிறுத்தம் - பரீட்சை நடக்கும் போதே மேற்பார்வையாளர் கூறியது எப்படி? - அப்துல்லாஹ் மஹ்ரூப் கேள்வி



அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு  நேற்று காலை 09.00மணிக்கு அவரது கிண்ணியா  காரியாலயத்தில் இடம் பெற்றது.


அண்மையில் வெளியான கா.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் திருகோணமலை சாஹிறா கல்லூரி மாணவர்களின் பெறு பேறுகள் பரீட்சைத்  திணைக்களத்தினால்  வெளியிடப்படாமை பற்றி கருத்துக்களை தெரிவித்தார்.


திருகோணாமலை ஸாஹிரா கல்லூரியின் அதிபர், மற்றும் கல்வியலாளர்கள்  பாடசாலை நிர்வாகத்தினரை சந்தித்து  70 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதை பற்றி கேட்டு அறிந்து கொண்டேன்.


கடந்த மே மாதம் 22ம் தேதி கல்வி திணைக்களத்தினால் 70 மாணவிகளும் விசாரணைக் குட்படுத்தப்பட்டனர். இதன் போது விசாரணைக்  குழுவினர் நடந்த விடையங்களை கூறுமாறு கேட்டனர்.  


மாணவிகள் பின்வருமாறு தெரிவித்தனர். பரீட்சை எழுத முதல் நாள் செல்லும்போது மாணவி ஒருவர் பர்தா அணிந்திருந்ததாகவும் ஏனைய 70 மாணவிகளும் தங்களுடைய துப்பட்டாவை  அணிந்திருந்ததாகவும் அம்மாணவிகள் கூறியிருக்கிறார்கள்.


அவர்களிடம் தங்களுடைய காதுகளை காட்டுமாறு கேட்டபோது துப்பட்டாவை எடுத்து விளக்கி காட்டியுள்ளார்கள். பின்னர் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


பரீட்சை மண்டபத்துக்குள் மேலதிகமாக இருந்த பரீட்சை மேற்பார்வையாளர். மூதுரைச் சேர்ந்தவர். 5 பாடங்கள் முடிந்து ஏனைய பாடங்களை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில்  ஒவ்வொரு நாளும் பரீட்சை நிலையத்துக்குள் நுழைந்து உங்களுக்கு பெறுபேறுகள் வராது என்று கூறி பரீட்சாத்திகளிடம் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார். இதைக் கூட பொருட்படுத்தாத மாணவர்கள் பரீட்சையை  தொடர்ந்து எழுதியுள்ளனர்.


பரீட்சை முடிந்து  இறுதி தினத்தில் நீங்கள் எப்படி பரீட்சை எழுதினாலும் எங்கு சென்றாலும் உங்களுக்கு பரீட்சை பெறுபேறுகள் வராது என்று கூறியிருக்கிறார் அந்த மேற்பார்வையாளர்.


அவர் சொன்னதன் பிரகாரம் குறித்த 70 மாணவிகளுக்கும் பரீட்சை பெறுபேறுகள் வரவில்லை. இவ்வாறு பெறுபேறுகள் வராது என்பதை  எவ்வாறு முன்கூட்டியே அவர் தெரிந்திருந்தார். இந்த விடயத்தை சமூகத்தின் மத்தியில் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் இங்கே ஒரு திட்டமிட்ட செயற்பாடு இடம் பெற்று இருக்கின்றது. 


இவ்விடயம் சம்பந்தமாக வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் மாணவிகளிடம் தாங்கள் கூறுவதை மட்டும் தான் எழுதித் தர வேண்டும் என்று  கட்டளையிட்டுள்ளார்கள்.


ஆரம்பத்தில் எழுத வைத்துவிட்டு நாங்கள் சொல்வதை தான் இறுதியில் எழுத வேண்டும் எனவும் பணித்துள்ளார்கள்.


பரீட்சைகள் யாவும் முடிந்து மாணவிகள் வெளியேறும் போது இதில் சிலருக்கு பெறுபேறுகள் வராது எனவும் கூறியுள்ளார்கள்.


இதை சிந்தித்துப் பார்க்கின்ற போது ஏதோ ஒரு சதி நடந்திருப்பதாக தெரிகின்றது. இதே வேளை  மூதுரை சேர்ந்த மேற்பார்வை அதிகாரி மாணவிகளுக்கு கச்சான் கொட்டையை (நிலக்கடலை) உண்பதற்கு கொடுத்திருக்கின்றார்.


உணவு கொடுப்பது பரீட்சை நிலைய அதிகாரி செய்ய வேண்டிய செயல் அல்ல. இந்த செயல்கள் எல்லாம் பரீட்சை எழுதுகின்ற மாணவிகளை திசை திருப்பும் நோக்கத்தில் செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுகின்றது.


திருகோணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற பழமை வாய்ந்த பாடசாலைகளிலே திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மிக முக்கியம்  வாய்ந்த கல்லூரியாகும். ஒவ்வொரு வருடமும் பத்துக்கு மேற்பட்ட மாணவ  மாணவிகள் மருத்துவத் துறைக்கும்  பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.


நடந்து முடிந்த நிகழ்வுகள் யாவும் கல்லூரிக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும்.


இந்த விடயம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு கல்வித் திணைக்களத்தினால்  அந்த மாணவிகளின் பெறு பேறுகள்  வெளிப்படுத்தப்பட வேண்டும் 


குறிப்பாக 10க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த பரீட்சையில் சித்தி அடைந்து மருத்துவத்துறைக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்பிரதேசத்தில் இயல்பற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கலாம்.


இவ்வாறான நிலை மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது பல வருடங்களாக படித்து இறுதியில் அவர்களது வாழ்க்கை தீர்மானிக்கின்ற ஒன்றாக இந்த பரீட்சையமைகின்றது 


இதை ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு எமது  தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »