Our Feeds


Wednesday, June 5, 2024

Zameera

நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே - அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்


 பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டின் நல்ல நிலைமை குறித்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்றால், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி உறுதியாக எல்லோரையும் அரவணைத்து செயற்பட வேண்டும். அதேபோன்று இப்போது இருக்கின்ற உலகளாவிய பிரச்சினைகளோடு சரியான இடத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைவராக நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கிறோம். எனவே அவர் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பலமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவார்.

முக்கியமாக, நான் ஒரு சிறுபான்மை மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நானும் நம்புகிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எமது பிரச்சினைகள் குறித்து சிறப்பான சில முன்னெடுப்புகளைச் செய்துகொண்டு வருகின்றார். மேலும், நம்பிக்கைக் கொள்ளக்கூடிய அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாகாண சபை முறையை நாங்கள் பலமாகக் கட்டமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார். இவற்றை அடுத்த வருடம் அமுலாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »