இலங்கையின் தற்போதைய கல்வி முறைமை நாட்டுக்கோ, பிள்ளைகளுக்கோ பிரயோசனமற்றதாகவே இருக்கின்றது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரட்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ரோஹினி குமாரி கவிரட்ன எம்.பி இவ்வாறு கூறினார்.
கொவிட் தொற்றுப் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமையால் பாதிக்கப்பட்ட கல்வித்துறை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. குறித்த காலப்பகுதியில் பொதுப் பரீட்சைகளை நடத்த முடியாதிருந்தது. கற்றல் நடவடிக்கைகளை சரியான காலத்தில் நிறைவு செய்ய முடியாமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதனால் கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் சம்பளம் தொடர்பான முரன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.
இந்நிலையில் தற்போதைய கல்வி முறைமை தற்போதைய பிள்ளைகளுக்கு பொருத்தமானதாகவும் இல்லை. இந்த முறைமையால் நாட்டுக்கோ, பிள்ளைகளுக்கோ, உலகத்திற்கோ எந்தப் பிரயோசனமும் இல்லை. பொருத்தமான சிறந்த கல்விமுறை இருக்குமாக இருந்தால் நாட்டின் பிள்ளைகள் இந்தளவுக்கு பிரச்சினைகளை எதிர்நோக்கமாட்டார்கள். உளவியல் ரீதியில் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றன. உலகில் மற்றைய நாடுகளில் எப்படி கல்வி முறைமை உள்ளது என்பதற்கு உதாரணங்கள் உள்ளன.