Our Feeds


Thursday, August 15, 2024

Sri Lanka

தேர்தல் காலத்தில் செய்யக்கூடாதவை!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்யக்கூடாத நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு இன்று (15) ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்தியது.


அதன்படி, சட்டவிரோத செயல்கள், தவறுகள், ஊழல்கள் மற்றும் உத்தரவுகளை மீறுவதற்கான தண்டனை ஜனாதிபதி தேர்தல் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது, மேலும் சில தவறுகளுக்கான தண்டனை தேர்தல் இழப்பு மற்றும் குடிமை இழப்பும் ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.எல். ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

ஒரு வேட்பாளருக்கு பாரபட்சம் காட்டுதல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டத்தின் 74வது பிரிவின் கீழ், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து வாக்குப்பதிவு முடியும் வரை, ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அதிகரிப்பதற்காக மற்றொரு வேட்பாளருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் பிற பொருட்களை காட்சிப்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

இது தொடர்பில் அனைத்து வேட்பாளர்களினதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான சட்டப் பணிகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபருக்கு உரிய ஆலோசனை வழங்கியுள்ளது.

விளம்பர காட்சிப்படுத்தல்

தேர்தல் பிரசார விளம்பரங்கள் அல்லது பிற விளம்பரப் புகைப்படங்கள் அல்லது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சித்திர வாக்குச் சின்னங்கள், கொடிகள் மற்றும் பதாதைகள் ஆகியவை குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மட்டுமே கூட்டத்தின் ஒரு நாளில் நடைபெறும் இடத்திற்கு அருகில் அல்லது முறையாக அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களில் விளம்பரப்படுத்தப்படலாம்.

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு

தேர்தல் காலங்களில் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தலாம், அதற்காக காவல்துறையின் முறையான அனுமதி பெற்றே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த முடியும்.

இலஞ்சம் அல்லது ஊழல் நடைமுறைகள் மற்றும் செல்வாக்கு

வேட்பாளருக்கு வாக்களிக்க ஏதாவது கொடுப்பது இலஞ்சமாக கருதப்படுகிறது.

அதன்படி, வாக்குகளைப் பெறுவதற்காக விருந்துபசாரம் செ்யதல், இலஞ்சம் வழங்குதல், தேவையற்ற அழுத்தங்கள் வழங்குதல், மோசடி செயல்களாக கருதப்படும்.

மேலும், வேட்பாளர்கள் மத நிகழ்ச்சிகள் அல்லது புனித இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலம் விளம்பரம் செய்யக்கூடாது.

அந்த விளம்பரப்படுத்தல் தேவையற்ற செல்வாக்கின் கீழ் வருகின்றன.

பொதுச் சேவைகளின் செயல்திறன் மற்றும் பொதுச் சொத்தைப் பயன்படுத்துதல்

தேர்தல் காலத்தில், அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், வங்கிகள், சபைகள் போன்ற அரசியலமைப்பு நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களும் அரசாங்க நிறுவனங்களாக கருதப்படுகின்றன.

இந்த அரச நிறுவனங்களின் சொத்துக்களை ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேட்பாளரை ஊக்குவிக்கவோ அல்லது பாரபட்சமாகவோ பயன்படுத்துவதற்கு கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரியும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்களிப்பைத் தவிர வேறு எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது.

மேலும் அரசியல் உரிமை உள்ள அரசு ஊழியர்கள் கூட அலுவலக நேரத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவுகளை ஒவ்வொரு அரசு அதிகாரியும், ஊழியரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவுகளை அனைத்து அரசு அதிகாரிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு, கடிதங்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலம்

ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒருவாரம் வரை பேரணிகளை நடத்த தடை விதிக்கப்படும்.

இவ்வாறான சட்டவிரோத பேரணிகளை நடத்தும் போது அதனை வீடியோவாக பதிவு செய்து நீதிமன்றில் வழக்குகளை பதிவு செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »