Our Feeds


Tuesday, August 13, 2024

Sri Lanka

நட்சத்திர சின்னத்தில் திலித் போட்டி - உதய கம்மன்பில!


சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர நட்சத்திர சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவுள்ளார். தேசியத்தை முன்னிலைப்படுத்தி வேட்பாளரை களமிறக்கியுள்ளோம். நாட்டின் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர சார்பில் செவ்வாய்க்கிழமை (13) தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தினர். இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அநுராத யஹம்பத், பாராளுமன்ற உறுப்பினர்களான  வீரசுமன வீரசிங்க, கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில குறிப்பிட்டதாவது,

தேசியத்தை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கியுள்ளோம். 69 இலட்ச மக்கள் நாட்டின் இறையாண்மையை கருத்திற் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஆனால் அவர் முறையாக செயற்படவில்லை. மக்களாணை பலவீனமடைய கூடாது என்பதற்காகவே தொழிலதிபர் திலித் ஜயவீரவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளோம்.

சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுவார். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். ஆகவே தேசியத்தை முன்னிலைப்படுத்தி களமிறக்கியுள்ள வேட்பாளருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.


எதிர்வரும் வாரம் முதல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோம். நாட்டின் ஒற்றையாட்சியை முன்னிலைப்படுத்தியதாக  எமது செயற்பாடுகள் காணப்படும். பொதுஜன பெரமுன பற்றி பேசுவது பயனற்றது. பொதுஜன பெரமுனவின் முடிவு எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »