Our Feeds


Friday, August 16, 2024

Sri Lanka

தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை


தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா.அரியேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும்.தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது.

தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் பொது வேட்பாளரான பா.அரியேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் சிந்திக்காமல் தமிழ் மக்கள் சார்பில் சிந்திக்க வேண்டும். இதற்கான கட்டாயம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

கட்சி ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அடையாளமாக பா.அரியேந்திரனை 89 கட்சி தரப்பினர் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இனி அவரை பற்றியோ, அவரின் கட்சி பற்றியோ பேசுவது அவசியமில்லை.

தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் அரியேத்திரனுக்கு சகல தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும். தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது மன வருத்தத்துக்குரியது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.வெளிப்படையாக இதனை குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால் ஒரு சிறுபான்மை தரப்பினர் இதனை தடுக்கிறார்கள்.ஆகவே இவர்கள் தமது முரண்பாடுகளை விட்டு விட்டு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை தமிழரசு கட்சி உறுதியாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »