Our Feeds


Sunday, August 18, 2024

Sri Lanka

இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்ப தமிழர்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் - உதய கம்மன்பில!


தமிழர்களின் மீதும் அவர்களின் கலாசாரத்தின் மீதும் எமக்கு பற்று உள்ளது. தமிழர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். ஆனால், நாட்டை பிளவுபடுத்தும் பிரிவினைவாதத்தை தூண்டும் இனவாதிகளை நாங்கள் எதிர்க்கிறோம். இனவாதமற்ற நாட்டை உருவாக்க தமிழர்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்ற சர்வஜன சக்தியின்  ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கில் நீங்களும் தெற்கில் நாங்களும் ஒரே குடும்பத்தின் பிள்ளைகள். இரு தரப்பினருக்கும் இடையில் கலாசாரம், மொழி என்ற அடிப்படையில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. வடக்கு அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை குறிப்பிட்டுக்கொண்டு தங்களை வளப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் பல கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை பிரிவினைவாதிகள் தங்களின் தேவைகளுக்காக பயன்படுத்தி வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் விரிசலை தோற்றுவிக்கிறார்கள்.

தமிழர்கள் மீது எமக்கு அன்பு உள்ளது. பிரிவினைவாதத்தை தூண்டிவிடும் அரசியல்வாதிகளை நாங்கள் வெறுக்கிறோம். தமிழர்களின் கலாசாரத்தின் மீது பற்று உள்ளது. இனவாதம் பேசுபவர்களே கீழ்த்தரமானவர்கள். ஆகவே இனவாதமில்லாத எம்முடன் தமிழர்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்.

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அருன்  சித்தார்த்தனுக்கு நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க, சிவில் செயற்பாட்டாளர்  அருன் சித்தார்த்தன், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர். .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »