Our Feeds


Monday, August 19, 2024

Sri Lanka

ஈஸ்டர் தின தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவோம் - சஜித் உறுதி!


உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்பை போன்று, உண்மைத் தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் தயாராக இருக்கிறோம்.

இதற்கான தெளிவான வேலைத் திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன. இது தொடர்பான விடயங்கள் பாராளுமன்றத்தில் கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சஜித், ஆசி பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு ஆயர் இல்லத்துக்கு நேற்று (18) விஜயம் செய்தார்.

இங்கு, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போலவே அருட்திரு மெக்ஸ்வெல் சில்வா மற்றும் அருட்திரு ஜே.டி.அந்தனி ஆகியோரையும் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆசிகளைப் பெற்றுக் கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு இடம் பெற்றதா என்பது குறித்தே இந்த நாட்டில் உள்ள கத்தோலிக்கர்களும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். இதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் சிக்கல் காணப்படுகின்றது. எனவே இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, கர்தினால் உள்ளிட்ட கத்தோலிக்க பேரவைக்கு எங்ஙனமும் தெளிவுபடுத்துவோம்.

அவ்வாறே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பின்னணி மற்றும் அதன் உண்மைத்தன்மை என்பனவற்றை எந்தவித பேதமும் இன்றி கண்டறிந்து, அதனுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »