Our Feeds


Wednesday, September 25, 2024

Zameera

ஜனாதிபதியின் விசேட உரை இன்று இரவு 7.30 மணிக்கு


 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் பிரிவுக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

22 தொகுதிகளிலும் உள்ள மாவட்ட செயலக அலுவலகங்களில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளது.

பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் 10வது நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடுகிறது.

இதேவேளை, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 11 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »