17வது பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று முன்தினம் முடிவடைந்தது. மொத்தமான 170 நாடுகளில் இறுதி பதக்க பட்டியலில் 85 நாடுகள் இடம்பிடித்தன.
கடந்த மாதம் 28ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பாராலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,463 வீர, வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இறுதி நாளின் இறுதி போட்டியாக அரங்கேறிய பளுதூக்குதலில் (107 கிலோ உடல் எடைப்பிரிவு) ஈரான் வீரர் அஹமட் அமின்ஜேடே தங்கம் வென்றார். இதைத் தொடர்ந்து இரவில் பாரிஸில் உள்ள ஸ்டேட்டி பிரான்ஸ் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சி, நடனம், சாகசங்களுடன் நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இறுதியில் தீபம் அணைக்கப்பட்டு, ஒலிம்பிக் கொடி 2028-ம் ஆண்டு பாராலிம்பிக்கை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.
பதக்கப்பட்டியலில் 2004-ம் ஆண்டில் இருந்து முதலிடத்தை பிடித்துவரும் சீனா இந்த தடவையும் 94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலம் என்று மொத்தம் 220 பதக்கங்களுடன் கம்பீரமாக முதலிடத்தை ஆக்கிரமித்தது.
அதிகபட்சமாக தடகளத்தில் 59 பதக்கங்களையும், நீச்சலில் 54 பதக்கங்களையும் வேட்டையாடியது.
இங்கிலாந்து 124 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 105 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பெற்றன.
போட்டியை நடத்திய பிரான்ஸூக்கு 75 பதக்கத்துடன் 8-வது இடம் கிடைத்தது. இதேவேளை உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை 75வது இடத்தை பிடித்தது. அகதிகள் அணியினர் இரண்டு வெண்கலம் கைப்பற்றினர்.
இந்திய 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்றது. தடகளத்தின் பங்களிப்பு மட்டும் 17 பதக்கங்களாகும். பதக்கப்பட்டியலில் இந்தியா 18-வது இடத்தை பிடித்தது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு டோக்கியோ பராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது.
'பறக்கும் மீன்' என்று செல்லமாக அழைக்கப்படும் சீன நீச்சல் வீராங்கனை ஜியாங் யுஹான் 7 தங்கப்பதக்கத்தை வென்றார். நடப்பு ஒலிம்பிக்கில் வெற்றிகரமான வீராங்கனையாக வலம் வந்த 19 வயதான இவர் சிறு வயதில் கார் விபத்தில் சிக்கி வலது கை மற்றும் வலது காலை இழந்தவர் ஆவார்.
Tuesday, September 10, 2024
பாரிஸ் பாராலிம்பிக்கில் முதலிடத்தில் சீனா - இலங்கைக்கு 75ஆவது இடம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »