Our Feeds


Tuesday, September 10, 2024

Zameera

தேசிய மக்கள் சக்தியின் பிரேரணைகள் பொருளாதாரத்தை பாதிக்கும் - ஜனாதிபதி


 தேசிய மக்கள் சக்தியின் பிரேரணைகள் அமுல்படுத்தப்பட்டால் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அநுரகுமாரவின் தேர்தல் வாக்குறுதிகளை தாம் பொருளாதார நிபுணர்கள் மூலம் ஆராய்ந்துள்ளதாகவும், அந்த முன்மொழிவுகளின்படி அடுத்த ஆண்டு அவர்களின் செலவு 8.9 டிரில்லியனாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், வரிச்சுமையைக் குறைப்பது போன்ற ஒரே தடவையில் செய்ய முடியாத சாத்தியமற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் வருமானம் 4.9 டிரில்லியன் ஆக இருக்கும் என்றும்  சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 04 டிரில்லியன் பற்றாக்குறையை எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்று நாட்டு மக்களுக்கு கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எனவே, மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து உண்மையான பொருளாதாரத் திட்டத்தை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள் என முன்னாள் விவசாய அமைச்சர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்த ஜனாதிபதி, தான் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மக்களைத் தொடர்ந்தும் அவர் ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

இன்று (09) பிற்பகல் ஹங்குரன்கெத்தவில் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், உணவு, மருந்து, எரிபொருள் வழங்க முடியாமல் மக்கள் தவித்த போது இந்த நாட்டைப் பொறுப்பேற்று மக்களை வாழ வைக்கும் முதன்மைப் பொறுப்பை நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தான் ஆரம்பித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, 'இயலும் ஸ்ரீலங்கா' நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு வேலைத் திட்டம் எனவும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் ஆணையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

மற்றைய தலைவர்கள் நாட்டை ஏற்க அஞ்சிய வேளையிலேயே நாட்டை ஏற்றுக்கொண்டேன். மக்கள் பசியில் வாடுவதைப் பார்ப்பது கஷ்டமாக இருந்தது. மருந்து இன்றி மக்கள் மரணிப்பதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. நாடு யாசகம் பெறுவதைத் தவிர்க்க வேண்டியிருந்தது. சஜித் - அனுர எல்லோருக்கும் அழைப்பு விடுத்தேன். ஒருவரும் வரவில்லை. ஆனால் இன்று மக்களுக்கு தீர்வுகளை வழங்கியிருக்கிறேன்.

அதனால், ரணில் - ராஜபக்‌ஷ என்று எனக்கு முத்திரை குத்தினார்கள். ராஜபக்‌ஷர்களை நான் பாதுகாத்திருந்தால் இப்போது அவர்கள் என்னை விட்டு ஓடியிருக்க மாட்டர்கள். எவ்வாறாயினும், நெருக்கடியில் நாட்டை ஏற்காமல் பயந்தோடியதை மறந்துவிட்டு என்னை விமர்சிக்கிறார்கள். மக்கள் பசியை போக்கியதால் என்னை திட்டித்தீர்த்தால் அதனை ஏற்றுக்கொள்வேன். எனவே மக்கள் பசியாற்ற எனக்கு ஆதரவளிக்க ஒரு குழு இருந்தது.

ஏணியை பிடித்துக்கொண்டிருந்தால் போதும் நான் பணியை செய்வேன். நான் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்டேன். 2023 ஆம் ஆண்டில் சிறந்த விளைச்சலுடன் சிறுபோகத்தை சாத்தியப்படுத்தினோம். அதற்கான ஐஎம்எப் விதித்த நிபந்தைகளையும் செயற்படுத்தினோம்.

சுயமான வருமானத்தை தேடிக்கொண்டு செயற்படுமாறு வலியுறுத்தினர். அதற்காகவே விருப்பமின்றி வற் வரியை அதிகரிக்க நேரிட்டது. அதனை செய்ததாலேயே பொருளாதாரம் மூச்சுவிட்டது. அதனால் இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்து. பொருட்களின் விலை குறைந்திருக்கிறது.

நாம் வழங்கியுள்ள நிவாரணம் போதுமானதல்ல. அதனாலேயே அஸ்வெசும போன்ற நிவாரண திட்டங்கள் செயற்படுத்தப்படுகிறது. தோட்டங்கள், தனியார் துறை, அரச துறை என அனைவருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்குகிறோம். அடுத்த வருடத்திலும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்.

நாம் வரிகளை குறைத்தால் பொருளாதார முன்னேற்றம் சரிவடையும். எனவே இந்த பிரச்சினைகளிலிருந்து மீண்டு வரவே 'இயலும் ஸ்ரீலங்கா' வேலைத் திட்டத்தை நாம் செயற்படுத்தியிருக்கிறோம். அதனால் தொழில், வரி குறைப்பு, ஏற்றுமதி பொருளாதாரம் போன்ற விடயங்களை மையப்படுத்தியே அதனை செயற்படுத்துவோம். காணி உறுதிகளை வழங்கவும், தோட்டங்களை கிராமங்களாக்கவும் தீர்மானித்திருக்கிறோம்.

2050 உலகின் சனத்தொகை அதிகரிக்கும்போது உணவுத் தேவையும் அதிகரிக்கும். அதனை இலக்கு வைத்து நவீன விவசாய திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.  தனியார் தொழில், சுய தொழிலுக்கும் மேம்பாட்டுக்கான நிவாரணங்களை வழங்குவோம். ரூபாவை பலப்படுத்தி பொருட்களின் விலையைக் குறைப்போம்.

ஜே.வீ.பி ஏற்றுமதி பொருளாதாரத்தில் செல்வதா இறக்குமதி பொருளாதாரத்துடன் செல்வதா என்பதை வௌிப்படையாக சொல்லவில்லை. அதைபற்றி கேட்டால் அனுரகுமார கோவம் கொள்கிறார். எனவே, இனி அவரை நண்பன் என்று சொல்லாமல் முன்னாள் விவசாய அமைச்சர் என்று சொல்கிறேன்.

எமக்கு தற்போது 6.8 டிரிலியன் செலவு இருக்கிறது. வருமானம் 5.1 டிரியின்களாகும். பிணைமுறி பத்திரங்கள் மூலம் இந்த இடைவௌியை நிவர்த்தி செய்ய எம்மால் முடியும். ஜே.வீ.பியின் வரவு செலவு திட்ட யோசனைக்கமைய செலவு 8.9 டிரிலியன்களாக காணப்படுகிறது. வரியை குறைத்தால் அவர்களின் வருமானம் 4.9 ஆக அவர்களின் வருமானமும் குறையும்.  எனவே இரண்டு யோசனைகளுக்கும் இடையில் 4 டிரிலியன் வேறுபாடு காணப்படுகிறது. மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து இதற்காக 5 சதவீதத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அவர்களின் வரவு செலவு திட்டத்திற்கு எங்கிருந்து பணம் தேடுவார்கள் என்பதை கூற வேண்டும்.

பணம் அச்சிடுவது மட்டுமே மாற்று வழியாக உள்ளது. எனவே ஜேவீபியின் வரவு செலவு திட்ட யோசனையை செயற்படுத்தினால் ரூபாவின் பெறுமதி 400 ரூபாய் வரையில் சென்று வட்டிவீதம் 25 ஆக அதிகரிக்கும். நான் சொல்வது பொய் என்றால் அது குறித்து அனுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

எனவே, நாட்டு மக்கள் தமது எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிலிண்டரும் கிடைக்காது. எதிர்காலமும் இருக்காது." என்றார்.  

அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

''நாட்டில் நெருக்கடி வந்தபோது 58 பாராளுமன்ற உறுப்பினர்கள் அருகில் இருந்தும் சஜித் ஓடிவிட்டார். மூன்று பேர் அருகில் இருந்தும் அனுரவால் செய்ய முடியாமல் போனதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியாக வந்து நாட்டைக் கட்டியெழுப்பினார்.

எவ்வாறாயினும், இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பையும் உறுதி செய்திருக்கிறார். எனவே மக்கள் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும்." என்றார்.

முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல,

"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியாகியிருப்பதால், அதில் பங்குகொள்ள வேண்டும் என்பதால் அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தேன். நாடு சரிவடைந்த வேளையில் ஆளும் கட்சி எதிர்கட்சி என்று பாராமல் அனைவரையும் மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழி செய்தார்.

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்தபோது இன்னும் 20 வருடங்களில் கூட எழுந்து வர முடியாதென நினைத்தோம். அப்போதைய ஜனாதிபதி நாட்டு மக்களை கைவிட்டு சென்ற வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் மீட்சிக்கு வழி செய்தார்.  எனவே அனுபவம் இல்லாத தலைவர்களைத் தெரிவு செய்தால் அதன் பலன்களையும் நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு செய்ததன் காரணமாகவே 350 பால்மா 1500 ரூபாய் வரையிலும் 750 சீமெந்து 3000 ரூபாய் வரையிலும் உயர்வடைந்தது. அந்த கஷ்டங்களை மக்களே அனுபவிக்க வேண்டியிருந்தது. எனவே, வாக்குறுதிகள் மட்டும் வழங்காமல் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்ககூடிய தலைவரே இன்று தேவையாக இருக்கிறார். மக்களை கஷ்டத்திலிருந்து மீட்ட தலைவருக்கு நன்றிக்கடன் செலுத்தவே நானும் இந்த மேடையில் ஏறினேன்." என்றார்.  

முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க,

"டீ.எஸ்.சேனநாயக்கவின் காலத்திலிருந்து 2003 வரையில் இந்நாட்டை பலர் நாட்டை ஆண்டுள்ளனர். 2003 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5.8 என மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இலங்கையின் பிரதராக இருந்தார்.

1971 - 88 - 89 - 84 ஆம் ஆண்டுகளில் ஜேவீபியினர் வீடுகளுக்கு தீவைப்பது, கப்பம் பெறுவது உள்ளிட்ட மோசமான செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அன்று அச்சத்தில் வாழ்ந்த மக்களை ஜேவீபி பயங்கரவாதத்திலிருந்து மீட்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே முன்வந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளை அளித்து கோட்டாய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்கினோம். ஆனால் குறுகிய காலத்தில் நாட்டின் அனைத்து துறைகளும் கண் முன்னே சரிந்தன.

அப்போதைய மக்கள் போரட்டத்திலும் ஜே.வீ.பி 78  எம்.பிக்களின் வீடுகளுக்கு தீ வைத்தது. நாட்டில் நூற்றுக்கணக்கிலான பஸ்களையும், 50இற்கும் மேற்பட்ட வேன்களையும் தீயிட்டனர். அதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகபடியானவர்கள் ஜேவீபியினர். பல்கலைக்கழகங்களுக்குள் ஜேவீபி செய்த அட்டகாசங்களையும் நாம் மறக்கவில்லை. அவர்கள்தான் இன்று அமைதி, சமதானம் பற்றி பேசுகிறார்கள்.

சஜித் பிரேதமாச, அரசாங்கத்தை ஏற்கத் திராணியற்றவர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே சவால்களை துணிச்சலாக ஏறக்க்கூடிய ஒரே தலைவர் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்." என்று தெரிவித்தார்.  

முன்னாள் ஆளுநர் நவீன் திசாநாயக்க,

"முன்னாள் ஜனாதிபதி பிரேதமாச கொல்லப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக பதவியேற்குமாறு அழைப்பு வந்தது. ஆனால் அப்போது டீ.பீ. விஜேதுங்கவிற்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 இல் நாட்டை ஏற்றுக்கொண்டபோது அவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாமல் போய்விடும் என்று எதிர்கட்சியினர் கனவு கண்டனர். ஆனால் அது நடக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் பல முறை தோற்கடித்திருக்கலாம். ஆனால் இம்முறை தோற்கடித்தால் நாடு சரிவைச் சந்திக்கும்.

சஜித் பிரேமதாச தன்னிடம் இங்கிலாந்தில் பெற்ற பட்டம் உள்ளது என்கிறார். ஆனால் அவரின் பட்டச் சான்றிதழை இன்று வரை காண முடியவில்லை. இன்று ஜேவீபியினர் வீடு வீடாக சென்று மக்களை அச்சுறுத்துகின்றனர். ஆனால் அதற்கு  ரணில் விக்ரசிங்க அஞ்சுபவர் அல்ல. ரணில் விக்ரமசிங்க என்பவர் ஜே.ஆர்.ஜயவர்தனவின் சீடராவார். அவரை வெல்லும் தலைவர்கள் எவரும் வேட்பாளர்கள் வரிசையில் இருப்பதாக தெரியவில்லை." என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »