தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களே இன்று தமிழ் பொது வேட்பாளருக்கு பின்னால் இருக்கின்றனர். பொது வேட்பாளரை எதிர்ப்பதனால் எமக்கு அச்சறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்கு பயந்து விட மாட்டோம், அடிபணிய மாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
1948ஆம் ஆண்டில் இருந்து தமிழ் தலைவர்களையும் , தமிழ் மக்களையும் சிங்கள அரசியல் தலைவர்கள் ஏமாற்றியதன் காரணமாகவே ஆயுத போராட்டம் தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் போராட்டத்திற்கான காரணம் சிங்களவர்களில் பெருமளவானோருக்கு தெரியாது. நாங்கள் பூர்விகமாக வாழ்ந்த மக்களே. எங்களுக்கான உரிமைகளை மறுத்த காரணத்தினாலேயே நாங்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழ முடியாது என்ற கோசங்கள் எழுந்தன.
ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிங்களத் தலைவர் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதியாவார். ஆனால் ஒரு சில தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளர் என்ற ஒருவரை களமிறக்கியுள்ளனர். இந்த மனநிலை அவர்களிடையே ஏற்பட சிங்களத் தலைவர்களே காரணம். யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் பொது வேட்பாளர் என்ற கோஷம் தமிழ் மக்களிடையே வந்துள்ளது என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் பெரும்பான்மை சமூகத்தின் தலைவர்கள் ஏற்க வேண்டும்.
பொறுப்புள்ள அரசியல் கட்சியாக 75 வருடங்களாக தமிழ் மக்களை வழிநடத்திய கட்சியாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுத்துள்ளது. பொது வேட்பாளர் என்ற விடயத்தை தமிழரசுக் கட்சி ஏற்கவில்லை. நாங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டின் எதிர்காலத்திற்காக தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக பெரும்பான்மை சமூகத்திற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.
இந்த சந்தர்ப்பத்திலும் இந்த தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிப்பார்களாக இருந்தால் அதன்பின்னர் தமிழ் மக்கள் எந்தப் பாதையில் செல்வார்கள் என்பதனை எங்களால் கூற முடியாது. ஆனால் பொறுப்புள்ள கட்சியாக வெற்றிப்பெறக்கூடிய பிரதான வேட்பாளருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.பொதுவேட்பாளருக்கு பின்னால் இருக்கும் ஒருசில அரசியல்வாதிகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளேன். ஆனால் இந்த பொதுவேட்பாளர் விடயத்தை ஆதரிக்கும் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒரு சிலரையும், சிவில் மக்கள் பிரதிநிகளையும் விமர்சிப்பதில்லை.
ஒருசில அரசியல்வாதிகள் இன்னுமொரு வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய எடுத்த விடயத்தை தாங்கள் எடுத்த மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை மறைப்பதற்காகவும் சலுகைகளை பெற்றதை மறைப்பதற்கும் ஒருசிலர் தமிழ் மக்களை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். தனிப்பட்ட நன்மைக்காக எங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஒருசில வேட்பாளர்கள் அறிவிக்கும் போது அதனை மறுக்க முடியாமலே பொதுவேட்பாளரின் பின்னல் இருக்கின்றனர். திரைமறையில் அவர்கள் பிரதான வேட்பாளருடன் வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.
ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதான வேட்பாளரை சந்தித்து எவ்வாறு மறைமுகமாக உங்களுடன் வேலைசெய்வது என்று கலந்துரையாடியுள்ளனர். ஆனால் நாங்கள் தமிழரசுக் கட்சி என்ற வகையில் அவ்வாறு மக்களுக்கு துரோகம் செய்யப் போவதில்லை. கடந்த விடுதலைப் போராட்டம் நடந்த போது இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் மீண்டுமொருமுறை பொதுவேட்பாளருக்கு பின்னால் இருந்துகொண்டு எமது தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். இதுவே உண்மை.
பொதுவேட்பாளரை எதிர்ப்பதனால் பல அச்சுறுத்தல்கள் எமக்கு விடுக்கப்படுகின்றன. தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் உங்கள் அரசியலை அழித்துவிடுவோம் என்றும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகாமல் பார்த்துக்கொள்வோம் என்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்கு பயந்து தமிழ் மக்களுக்கு தேவையான விடயத்தை கூறாமல் இருக்கப் போவதில்லை.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவார். பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை எமக்குள்ளது என்றார்.
Thursday, September 5, 2024
விடுதலை போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களே தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் உள்ளனர் - சாணக்கியன்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »