Our Feeds


Monday, September 16, 2024

Sri Lanka

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை!


இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் என்றும் குறிப்பிடும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack), அதனை எதிர்வரும் தேர்தலில் இலங்கை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கைக்கு மீள்வதற்கான வாய்ப்பை வழங்க இந்த வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைவது மிகவும் முக்கியமானது என்றும்  ஜூலி கொசெக் (Julie Kozack) கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர்  ஜூலி கொசெக் (Julie Kozack) கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கடந்த ஜூன் 12 ஆம் திகதி, எங்களின் நிர்வாகக் குழுவினால் 2024 இலக்கம் IV உறுப்புரையின் கீழ் முன்னெடுக்கப்படும்  ஆலோசனை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் (EFF)  தொடர்பான வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. அதன் மூலம்  இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்திட்டத்தின் செயல்திறன் வலுவாக உள்ளது. மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் பிரதிபலன்கள் காட்டப்பட்டுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் அரச வருமானம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் உள்ளது. எனவே, மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும்"

தனியார் கடன் வழங்குநர்கள் தங்கள் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்புகளை நிறைவு செய்தல் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தங்களை எட்டுவது முக்கிய மைல்கற்களாக அமையும்  என்றார்.

மேலும், IMF பணிக்குழாமினால் ஒன்றிணைக்கப்பட்ட கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து, அதன் மதிப்பீட்டை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, IMF பணிக்குழாமினால்  இந்த மதிப்பீட்டை இலங்கை பிணைமுறி உரிமையாளர்களின் நிதி ஆலோசகர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், “இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் எங்களின் பணி அதிலிருந்து முடிவடைகிறது.  கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் பங்கேற்பதில்லை என்பதை நான் இங்கு வலியுறுத்த வேண்டும். அந்த பேச்சுவார்த்தைகள் கடன் பெற்ற நாட்டிற்கும் அதன் கடன் வழங்குநர்கள் இடையில் நடைபெறுகின்றன. சர்வதேச நாணய நிதியம் கடன் நிலைபேற்றுத்தன்மையின் பொதுவான மதிப்பீட்டை மாத்திரமே செய்கிறது. மேலதிக விபரங்களுக்கு, இலங்கை அதிகாரிகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையைப்  ஆராயுமாறு பரிந்துரைக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் கடன் நிலைபேற்றுத்தன்மை மதிப்பீடு (DSA) தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த  ஜூலி கொசெக் (Julie Kozack),

“இதற்கான எனது பதில் எனது முந்தைய பதில்களைப் போலவே உள்ளது. முதலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில், இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருப்பதைக் காணலாம். ஆனால் இலங்கை தனது வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு, இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடைந்த சாதனைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

மூன்றாவது மீளாய்வுக்கான காலம் குறித்து தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும். எனவே,  ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர், புதிய அரசாங்கம் அல்லது இலங்கை மக்கள்  செய்யும் தெரிவின் அடிப்படையில், வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர எதிர்பார்க்கிறோம். அதன்படி செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »