அமைச்சர் அலி ஸாஹிர் மெளலானா அவர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் விடுவிக்கப்பட்டு மீண்டும் பொதுமக்கள் தொழுகைக்காக வழங்கப்பட்டது - அல்ஹம்து லில்லாஹ்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை சுபஹ் தொழுகை முதல் பள்ளிவாயலின் அனைத்து காரியங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொழுகையை காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் நடாத்தியதுடன் குறித்த நிகழ்வில் இதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட அமைச்சர் அலி ஸாஹிர் மெளலானா கலந்து கொண்டிருந்ததுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ULMN. முபீன், உட்பட சம்மேளன பிரதிநிதிகள், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இப்பள்ளிவாசல் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து 2021ல் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் புலனாய்வு அலுவலகம் ஒன்றை அங்கு அமைக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை அதனை இடைநிறுத்தம் செய்து குறித்த பள்ளிவாசலை மீண்டும் திறந்து அன்றாட மார்க்க சமூக கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அலி சாஹிர் மௌலானா அவர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள்,
கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றில் கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்த வேளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து குறிப்பிடும் போது காத்தான்குடி சார்பில் இதையும் ஒரு விடயமாக குறிப்பிட்ட அலி சாஹிர் மௌலானா அவர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததுடன், இது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு சபையினை கூட்டி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுக்கு குறித்த பள்ளிவாசலை விடுவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க பணிப்புரை விடுத்தார்கள்,
அத்துடன் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு வருகை தந்த வேளையும் சுட்டிக்காட்டியதுடன், அதற்கு பிற்பாடு தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் தருணம் முன் வைத்த நிபந்தனைகள் பட்டியலில் குறித்த பள்ளி விடுவிப்பும் பிரதானமாக உள்ளடக்கப்பட்டு இருந்த நிலையில் ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழியின் பிரகாரம் தற்போது அது விடுவிக்கப்பட்டுள்ளது.
சிலர் தேர்தலில், தான் ஆதரவளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவினை வழங்க கண் துடைப்பு ஒப்பந்தங்கள் செய்தோம் என்று கூறினாலும் வெளிப்படைத்தன்மை இன்றி அதனை மலுப்பலுடன் கூறுவோர் மத்தியில் தான் என்ன, என்ன கோரிக்கைகள் வைத்தேன் என பகிரங்கமாக வெளியிட்டு அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களது முன்னெடுப்புக்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.