Our Feeds


Tuesday, September 10, 2024

Sri Lanka

மொட்டுக் கட்சியின் மேலும் பல முக்கியஸ்தர்கள் சஜித்துக்கு ஆதரவு!


ரணிலை நம்பியிருந்த மொட்டுக் கட்சியின் 30 இற்கும்  மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர் என தெரிய வருகிறது.

மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடாமலும் ஆலோசிக்காமலும் அநுர குமார திசாநாயக்கவுடன் இரகசிய சந்திப்புகளை நடத்தி அநுர குமாரவுடன் அரசியல் டீலுக்கு வந்துள்ளமையே இதற்கு காரணம் என அறியமுடிகிறது.

இவ்வாறு தன்னை மாத்திரம் கருத்திற்கு கொண்டு தீர்மானங்களை எடுத்து வரும் ஜனாதிபதியோடு பயணிப்பதால் தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனக் கருதி, ஜனாதிபதி தேர்தலை அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவதற்கு இத்தரப்பு முயற்சித்து வருகிறது.

இதன் பிரகாரம், அதிருப்தியிலுள்ள 30 க்கும் மேற்பட்ட மொட்டு உறுப்பினர்கள் நேற்று இரவு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார, டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அடுத்தடுத்த சந்திப்புகளின் பின்னர் மொட்டுக்குக் கட்சியின் 30 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு  ஆதரவை நல்கும் முகமாக மேடை ஏறவுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதோரை இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

நேற்றைய தினம் கண்டியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்தோடு இணைந்தார்.

அவ்வாறே, ரணிலின் தோல்வியைத் தொடர்ந்து அடுத்த வரும் தேர்தல்களுக்கு முகம் கொடுக்க முடியாது போகின்றமையால் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த பல பிரபலங்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக நேற்று நடந்த ஊடக சந்திப்பொன்றில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »