முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும் முஸ்லிம் எம்.பிக்கள்
இருக்கிறோம்' என கோட்டாபய ராஜபக்ஷவின் அத்தனை அநியாயங்களுக்கும் தம்மை விட்டுச்சென்ற எம்.பிக்கள் துணைபோனதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அனுராதபுரத்தில் (11) நடந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது,
"நீண்ட நாட்களுக்குப் பின்னர் இவ்வூரில் பேசக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக முதலில் இறைவனுக்கும் இரண்டாவதாக ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
நமது வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வந்த இஷாக் ரஹ்மான், எமது சமூகத்துக்கு எதிரான கோட்டாபயவின் கொடூரச் செயல்களைக் கை கட்டிப் பார்த்து நின்றார். அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு இவர்கள் ஆதரவளித்ததால்தான், ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் மேலோங்கின.
அரசியலில் அவரை ஆதரிக்கவில்லை என்பதற்காக எமது சமூகத்தைப் பழிவாங்கினர். முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தனர். வியாபார நிலையங்களுக்குத் தீ வைத்தனர். கொரோனா ஜனாஸாக்களை எரித்து சந்தோசம் அடைந்தவர்களுடனேயே, இஷாக் ரஹ்மான் இணைந்துள்ளார். இதனால்தான், எமது கட்சியின் மூன்று எம்.பிக்களையும் நீக்கினோம். இவர்களை ஒருபோதும் இணைக்கப் போவதில்லை. எனவே, இவர்களைத் தோற்கடிக்க ஒன்றுபடுங்கள்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாச, தனது தந்தையைப் போன்று நேர்மையானவர். ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவி, இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கினார். ஜனசவியத் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு வாழ்வளித்தார்.