குழந்தைகள் தொடர்பில் சிந்தித்தே, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புலமைப்பரிசில் வினாத்தாளின் மூன்று வினாக்கள் தொடர்பில் முழு மதிப்பெண்களை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நெற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.
“இது தொடர்பான முழுமையான அறிக்கையை செயலாளர் ஊடாக பிரதமரிடம் சமர்ப்பித்தோம். அறிக்கைகளை மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க குழுவொன்று நியமிக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி இந்த தீர்மானத்திற்கு வந்தோம்.
இதன்போது, அதற்கு தீர்வாக, மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்குவதாக நேற்று அறிவித்தோம். விடையளித்த மற்றும் விடையளிக்காத அனைவருக்கும் முழு மதிப்பெண் வழங்க தீர்மானத்தோம். அதன்படி, மிக விரைவாக மதிப்பீடுகளைச் செய்து பெறுபேறுகளை வௌியிட முடியும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதனை குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எந்த வகையிலும் இந்த தீர்மானம் பாரிய பாதகத்தை ஏற்படுத்தினால், மீண்டும் பரீட்சைக்கு செல்ல தயங்க மாட்டோம் என்பதை தெளிவாக கூற வேண்டும்.
இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளோம். ஆனால் இந்தச் சம்பவத்தைப் பார்க்கும் போது மீண்டும் பரீட்சைக்கு செல்லாமல் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் நிலைமை காணப்படுகிறது.
எமது நிபுணர் குழுவினர் அவர்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குழந்தைகளுக்கு மிகவும் நியாயமான முறையில் இந்த தீர்மானத்தை எடுத்தோம். குறிப்பாக இது குழந்தைகளைப் பற்றி சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவாகும். இந்தப் பரீட்சை குழந்தைகளுக்கு ஒரு பாரிய அழுத்தத்தை கொடுக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நாம் அதை மேலும் அதிகரிக்காமல், இது ஒரு நியாயமான தீர்வு என்று குறிப்பிடுகிறோம்.