Our Feeds


Wednesday, October 16, 2024

Zameera

கல்வி திட்டங்கள் உலகளாவிய தேவைகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்

உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களை அறிவாற்றல் நிறைந்தவர்களாக மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

அடுத்த பத்து ஆண்டுகளில் உலகிற்கு தேவையான மனித வளத்தை உருவாக்கும் பொறுப்பு கல்வி அதிகாரிகளை சார்ந்துள்ளது. அதற்கான பரந்த நோக்குடன் கல்வித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) நடைபெற்ற கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வின் போது கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்களினால் செயற்படுத்தப்படும் ஐந்து திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

பாடசாலைக் கல்வி நவீனமயமாக்கல், ஆசிரியர் கல்வி, இடைநிலைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வியின் மேம்பாடு என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

 

இது தொடர்பான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தனர்.

 

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மிகவும் செயற்திறனுள்ள பாடசாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்பதோடு மாணவர்களுக்குச் விருப்பமான சூழலை உருவாக்கி சகல மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் வகையில் பாடசாலைக் கல்வியை மறுசீரமைப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

 

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய உயர்தர பாடங்களை கற்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

 

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். 

 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »