இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது பூரண அரச மரியாதையுடன் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதை வழங்கி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின், இருதரப்பு பிரதிநிதிகளும் இரு நாட்டு தலைவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வில் இராஜதந்திரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, ராஜ்கொட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவுச்சின்னத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை நினைவுகூரும் வகையில் ராஜ்கொட்டில் உள்ள காந்தி தர்ஷன் வளாகத்தில் அசோக மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விருந்தினர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (16) நடைபெறவுள்ளது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது.
அதே வேளை , இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் நிதி மற்றும் நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார அமைச்சர் ஜே. பி. நட்டா ஆகியோரையும் ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்த உள்ளார்.
மேலும் எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து இந்தியாவிலுள்ள பாரிய அளவிலான வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Monday, December 16, 2024
இந்தியாவில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »