Our Feeds


Monday, December 23, 2024

Zameera

அரிசித் தட்டுப்பாடு தொடரும் நிலைமை : வரியை குறைக்குமாறு அரசாங்கத்திடம் வர்த்தகர்கள் மீண்டும் கோரிக்கை


 அரிசி இறக்குமதிக்காக ஒரு கிலோ அரிசிக்கு சுங்க அதிகார சபையால் விதிக்கப்பட்டுள்ள 65 ரூபா வரியை குறைக்குமாறு அரசாங்கத்திடம் வர்த்தகர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரிசிக்கான வரி குறைக்கப்படுமாயின் சந்தையில் கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியுமென நுகர்வோர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.


சுமார் 02 மாதங்களாகத் தொடரும் அரிசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகளை நிர்ணயித்தல், நுகர்வோர் அதிகாரசபையினரால் அரிசி ஆலைகளை சோதனைக்குட்படுத்தல் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்திருந்தது.


அரிசி இறக்குமதிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 20 ஆம் திகதி வரையான (டிசம்பர் 04ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை) காலப்பகுதிக்குள் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பச்சை அரிசி 28,500 மெற்றிக் தொன் எனவும் எஞ்சிய 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும் இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.


இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபா என்ற ரீதியில் 4.3 பில்லியன் ரூபா இறக்குமதி வரியாக சுங்கப்பிரிவு அறவிட்டுள்ளது.

‘‘வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டநிலையில், நாட்டில் நிலவிவந்த அரிசிக்கான நெருக்கடி ஓரளவு குறைந்துள்ளபோதிலும், சில பிரதேசங்களில் இன்னும் போதியளவிலான அரிசி இல்லையெனத் தெரியவருகிறது.


இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியானது சந்தைக்கு வரும்போது விலை அதிகரிக்கும். கட்டுப்பாட்டு விலைக்கு அதனை விற்பனை செய்யமுடியாது. புறக்கோட்டையிலேயே வெள்ளைப் பச்சை அரிசி ஒரு கிலோ 215ரூபாவுக்கு விற்கப்படுகிறது. 25ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூர் அரிசியை அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்’’ என சில்லறை விற்பனையாளரொருவர் தெரிவித்துள்ளார்.


மேலும் தம்மிடம் உள்ளூர் அரிசி கையிருப்பில் இருப்பதாகவும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இல்லையெனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து மற்றுமொரு வியாபாரி தெரிவிக்கையில்,


‘‘எங்களிடம் உள்ளூர் அரிசி, நாட்டரிசி, கீரி சம்பா உள்ளிட்டவையே இருக்கின்றன. ஆனால், வெள்ளைப் பச்சையரிசி மற்றும் சிவப்பரிசி இல்லை. புத்தாண்டுக்கு பாற்சோறு இல்லை. சீனிச்சம்பலுடன் ரைஸ் சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அம்பாறை பரகஹகலே பகுதியில், நுகர்வோர் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் எனத் தெரிவித்து, சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கே.சுபானி


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »