சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒழுக்க நெறியை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பதவி விலகியுள்ள போதிலும் தமது கல்வித் தகைமை தொடர்பில் இதுவரையில் உரிய வகையில் அவர் விளக்கமளிக்கவில்லை.
அதேநேரம், பட்டங்களைப் பெற்றுள்ளதாகப் போலியான தகவல்களைச் சமர்ப்பித்துள்ள மேலும் பலர் ஆளும் தரப்பில் உள்ளனர்.
கற்றவர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவருவதாகக் கூறி, தேசிய மக்கள் சக்தி, பொய்யர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இவ்வாறானவர்களைக் களையெடுப்பதற்கு, மீண்டுமொரு சிரமதானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
இதன்படி நாளை மறுதினம் மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது புதிய சபாநாயகரை நியமிப்பது முதல் பணியாகும்.
இதேவேளை, சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரதி சபாநாயகர் மொஹமட் றிஸ்வி சாலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி மற்றும் லக்ஷ்மன் நிபுணாராச்சி ஆகியோரில் ஒருவர் புதிய சபாநாயகராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sunday, December 15, 2024
மீண்டுமொரு சிரமதானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது - அஜித் பி பெரேரா!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »