Our Feeds


Tuesday, December 24, 2024

Sri Lanka

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரலில் அறிவியுங்கள் - உதய கம்மன்பில



மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி ஊடகங்களுக்கு அறிவித்திருக்கிறார். சட்டவாக்கம் தொடர்பில் தெளிவில்லாமலேயே ஜனாதிபதி இவ்வாறான கருத்தை முன்வைத்தி ருக்கிறார். தற்போதுவரையில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச்செய்வதற்காக பாராளுமன்றத்தில் சட்டமொன்றை நிறைவேற்று வதற்காக அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. ஆனால், சரியான சட்டமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் அனுமதிபெற்று வர்த்தமானியில் வெளியிட்டு இருவாரங்களாகும்வரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாது.

ஒருவேளை நேற்றைய அமைச்சரவையில் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் ஜனவரி மாதம் 14ஆம் திகதிவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது.

அடுத்த வருடத்தின் முதலாவது சபைக் கூட்டம் ஜனவரி 21ஆம் திகதியே இடம்பெறும். 21ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மேலும் இருவார காலம் வழங்கப்படவேண்டும். அவ்வாறெனில், பெப்ரவரி 05ஆம் திகதியே இந்தச் சட்டமூலத்துக்கு அனுமதி பெற்று முழுமை செய்ய முடியும். அதனை முறையாக ஒழுங்குபடுத்தி சபாநாயகரிடம் கையொப்பம் பெற இரு நாட்களாவது ஆகும்.

அதன் பின்னரே அது சட்டமாக அமுலாக்கப்படும். அவ்வாறெனில், பெப்ரவரி 08 ஆம் திகதியே தேர்தல் ஆணைக்குழு அவசரமாக ஒன்றுகூடி தேர்தல் அறிவிப்புக்கான தீர்மானங்களை எடுக்கும். 09ஆம் திகதி தேர்தலை அறிவித்தால் பெப்ரவரி 23 – 26ஆம் திகதிவரை வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்படும்.

உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 05 07 வாரங்களில் தேர்தல் இடம்பெற வேண்டும்.

அவ்வாறெனில், ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி தேர்தல் இடம்பெற வேண்டும். எனவே, இன்றே (நேற்று) சட்டமூலத்தை சமர்ப்பித்து நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்தால் மாத்திரமே ஏப்ரல் 05ஆம் திகதி தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும். இதற்கிடையில் மார்ச் மாதத்திலேயே சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. எனவே, பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலேயே தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படையலாம். அதனால், பரீட்சைக் காலத்தில் தேர்தலை நடத்துவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தலை அறிவித்தால் மே மாதத்தின் இடைப் பகுதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்கும்.

எனவே, சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »