Our Feeds


Tuesday, December 3, 2024

Zameera

புதிய அரசியலமைப்பில் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும்


 புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும். அத்துடன் 13ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதன் மூலம் இந்தியாவுடன் பகைத்துக் கொண்டு அல்லது சீனாவுடன் ஒன்று சேர்ந்து எதையும் சாதிக்க முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை  விளக்க உரை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அதேவேளை, 13வது திருத்தத்தை மாற்றி யமைப்பதன் மூலம் இந்தியாவுடன் பகைத்துக் கொண்டு அல்லது சீனாவுடன் ஒன்று சேர்ந்து எதையும் சாதிக்க முடியாது என குறிப்பிட்ட அவர் பூகோள ரீதியில் இந்தியா எமக்கு மிகவும் அண்மித்த முக்கிய நாடு என்பதையும் சுட்டிக் காட்டினார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான முதலாம் நாள் பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இனவாதம் இல்லாத நாடு ஒன்று அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய மக்கள் சக்தி இந்த அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது என்பது அனைவரும் பாராட்டக்கூடிய விடயமாகும். இந்த முறை தேர்தலில் வாக்களிப்பும் இன பாரபட்சம் இல்லாத வகையிலேயே நடந்துள்ளது. இது தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இது நாட்டின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் சிறந்த சகுனம் என்பது எனது கருத்து.

13 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றிய மைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா  அண்மையில் தெரிவித்திருந்தார். புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் போது அதில் 13 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டு அதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி வகுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அது உண்மையில் வரவேற்கக் கூடிய விடயம். 

அதே வேளை, புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் போது மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்  அதன் மூலம் இலங்கையில் இனங்களுக்கிடையில் நிலவும் குரோதங்கள் இல்லாதொழிந்து சிறந்த நிலை ஏற்படுமாயின் அதை நாம் வரவேற்கின்றோம் என்பதுடன் அதற்கு நாம் பூரண ஆதரவளிப்போம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. 

இந்தியாவால் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தை மாற்றி இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது தொடர்பில் சிந்தித்து செயற்படுவது அவசியம். பூகோள ரீதியில் எமக்கு மிக அண்மித்த நாடு இந்தியா. அந்த நாட்டைப் பகைத்துக் கொண்டு அல்லது சீனாவோடு நாம் சேர்ந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

இன்று எமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது அதனால் தான் அரசாங்கங்கள் தமது முழுமையான ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. கோட்டாபய வீட்டுக்கு போனாதால்தான் தற்போதைய அரசாங்கத்துக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனால் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »