Our Feeds


Thursday, December 26, 2024

Sri Lanka

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரலில் நடக்குமா என்பதில் சந்தேகம்?


உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்தபோதிலும், அரசாங்கம் திட்டமிட்டபடி தேர்தல் இடம்பெறுமா என்பதில் அச்சம் நிலவுகிறது.

தேர்தலை நடத்த முன்னர் அதற்கான சட்டதிருத் தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முன்னதாக தீர்மானித்திருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்பட வில்லை.

அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்தபோது, அரசாங்கம் முன்னர் அறிவித்ததைப்போன்று உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தாரென பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யாமல் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் வாக்கெடுப்பு தினத்தை தீர்மானிப்பதில் சட்டச்சிக்கல் காணப்படுகிறது. ஆகவே, சட்டதிருத்தப் பணிகளை விரைவாக நிறைவுசெய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு முன்னதாக அறிவு றுத்தியிருந்தது.

ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை இரத்துச் செய்து புதிதாக வேட்பும னுக்களைக் கோருவதாயின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டுமென தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு அறிவுறுத்தியிருந்தது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் திருத்தம் செய்வதாக பொது நிர்வாகம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 80 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தேர்தல் செலவுகளை மதிப்பிடுவது கடினமானதெனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் நுவன் செனரத்திடம் வினவியபோது அவர் கூறியதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக பழைய வேட்பு மனுக்களை இரத்துச் செய்து புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்காக சட்டமூலத்தைத் தயார் செய்துவிட்டோம்.

ஆனால், அது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதியாகக் கூற முடியாது. அநேகமாக ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருக்கிறோம். விரைவில் தேர்தலை நடத்தவேண்டியிருக்கிறது. ஏப்ரல் மாதமாகும்போது உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டுமென்று அறிவித்திருக்கிறோம். எனவே, இருக்கும் குறுகிய காலப்பகுதியில் ஏனைய செயற்பாடுகளை விரைவாகச் செய்யவேண்டி ஏற்படும். இல்லாவிட்டால், திட்டமிட்டபடி செய்வதில் சிக்கல் ஏற்படலாம்.

எப்படியாயினும், சட்டமூலத்தைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம். ஜனவரி மாதம் இடம்பெறும் பாராளுமன்ற அமர்விலேயே சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிப்பதா என்பது தொடர்பில் கலந்துரையாடவேண்டியுள்ளது.

கலந்துரையாடியதன் பின்னரே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டுமென்று குறிப்பிட்டார். இந்நிலையில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகையில்,

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பில் உறுதியாகக்கூற முடியாது. சற்றுக் கால அவகாசம் தருமாறு குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »