Our Feeds


Sunday, December 8, 2024

Sri Lanka

BREAKING: தப்பியோடிய சிரியா ஜனாதிபதியின் விமானம் காணாமல் போனதா? - நடந்தது என்ன?



சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு நடந்த நிலையில், அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் இடம்பெற்று வருகிறது. இதில், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கையை விட 2 மடங்கு (6 இலட்சம்) என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.


சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக போராட்டகாரர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்த கிளர்ச்சி வெடித்துள்ளது.


சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை போராட்டகாரர்கள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி வருகின்றனர். இந்நகரை கைப்பற்றினால், போராட்டகாரர்களின் கை ஓங்கும் என கூறப்படுகிறது.


இந்த சூழலில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கசை போராட்டகாரர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசு படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் டமாஸ்கசை விட்டு வெளியேறினார்.


இதனைத்தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் அல்-ஆசாத்தின் தந்தை சிலையை கிளர்ச்சியாளர்கள் உடைத்தனர். மேலும் டமாஸ்கசில் முக்கிய சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.


இதுதொடர்பாக போராட்ட அமைப்பின் மூத்த தளபதி ஹசன் அப்துல் கானி, “டமாஸ்கஸ் நகரத்தை பஷர் அல்-ஆசாத்திடமிருந்து விடுவித்ததாக நாங்கள் அறிவிக்கிறோம். உலகம் முழுவதும் இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியும் வருகிறது.


IL -76 ரக விமானத்தில் பஷார் அல்-ஆசாத் தெரிவிக்கப்படாத இடம் ஒன்றுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது அந்த விமானம் பறக்கும் உயரத்தை இழந்து லெபனான் அருகே ரேடாரில் இருந்து காணாமல் போனது எனவும் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் சர்வதேச ஊடகங்களை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. (இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »