Our Feeds


Sunday, February 16, 2025

Sri Lanka

எதிர்வரும் 3 மாதங்களில் பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் - மத்திய வங்கி எதிர்வுகூறல்!


திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. 

2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டு மத்திய வங்கி இதனைக் குறிப்பிட்டுள்ளது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகத் தொழிலாளர்கள் பெருமளவில் வெளியேறுவதும், நிபுணர்களின் இடம்பெயர்வு காரணமாக அனுபவம் வாய்ந்த பணியாளர்களை இழப்பதும் வணிகங்களில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். 

இது உற்பத்தித்திறனில் தொடர்ச்சியான சரிவுக்கு வழிவகுக்கும் எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

உள்நாட்டிலும் உலக அளவிலும் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் போக்குகளைக் கருத்தில் கொண்டு, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்புகளுக்கான அபாயங்கள் குறித்த மதிப்பீட்டை இந்த அறிக்கை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிடுகிறது. 

அதன்படி, தொழில்துறை உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், மின்சார உற்பத்தி போன்ற துறைகள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதுபோன்ற நிகழ்வுகள் நடுத்தர காலத்தில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய வங்கியின் நாணய கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள், விசேடமாக அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் வெளிநாட்டுத் துறையின் செயல்திறனைப் பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் ஏற்படும் கொள்கை மாற்றங்கள், இலங்கையின் வெளிநாட்டுத் துறைக்கு முக்கியமாக உலகளாவிய வர்த்தகம், முதலீடு,மூலதன ஓட்டங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும். 

இதனிடையே இந்த ஆண்டின் ஜனவரி மாத கணக்கெடுப்பின்படி, அரசாங்க செலவினம் மற்றும் ஊதிய உயர்வு, தனியார் வாகன இறக்குமதி மீதான தடையைத் தளர்த்துவதன் மூலம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி, உலகளாவிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பண்டிகை மாதங்களில் அதிக தேவை போன்ற காரணிகளால், எதிர்வரும் 3 மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பணவீக்கத்தில் படிப்படியான அதிகரிப்பு அல்லது நீண்ட கால அதிகரிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டுக்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »