புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டு கொல்லப்பட்டமையை அடுத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதில் கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்கு துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்த பெண், கொழும்பில் உள்ள ஒரு தங்குமிடத்தில் இருந்து வந்ததாக சஞ்சீவவைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தனது வாக்குமூலத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தானும், குறித்த பெண்ணும் கொலையைச் செய்த பிறகு மருதானை பகுதிக்கு சென்று முச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு பகுதிக்கு சென்றதாகவும், அதனையடுத்து தானும் அந்தப் பெண்ணும் தனித்தனியாக பயணம் செய்ததாகவும் குறித்த சந்தேகநபர் தெரிவித்தார்.
மேலும், புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம், டுபாயில் தற்போது மறைந்திருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மே எனப்படும் மண்டுனி பத்மசிறி பெரேராவால் திட்டமிடப்பட்டது என்பது முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், தற்போது கொழும்பு குற்றப்பிரிவால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சம்பவம் தொடர்பில் பல தகவல்களை அவர் தனது வாக்குமூலத்தின் ஊடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொலைக்கு ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தத் தொகையாக தறுவதாக தனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். கொலை செய்வதற்கு முன்பு இரண்டு இலட்சம் ரூபாவை தான் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பிறகு தன்னை முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்று அடையாளம் காட்டிக் கொண்டாலும், அது அவரது உண்மையான பெயர் அல்ல என்று தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் பல அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளார். அதில் வழக்கறிஞர் என்று அடையாளம் காட்டும் அடையாள அட்டையும் அடங்கும்.
கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காகவே வழக்கறிஞர் என்ற அடையாள அட்டை உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Thursday, February 20, 2025
கனேமுல்ல சஞ்சீவ கொலை சந்தேகநபரின் வாக்குமூலம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »