Our Feeds


Wednesday, February 12, 2025

Zameera

குவைத் பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுரவுக்கு இடையில் சந்திப்பு


 2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை  (11) பிற்பகல் இடம்பெற்றது.  

தற்போது இலங்கையின் அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கான சாத்தியங்கள் விரிவடைந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவது மற்றும் சந்தையை பன்முகப்படுத்துவது குறித்து இரு தரப்பும் கவனம் செலுத்தியதுடன், அதற்கான புதிய உத்திகளைக் கண்டுபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்கு குவைத் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவுக்கு நன்றி தெரிவித்தார்.

குவைத்தில் சுமார் 155,000 இலங்கைப் பணியாளர்கள் இருப்பதாகவும், அவர்களிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் வருமானமாக கிடைப்பதாகவும், இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »