இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை - கொழும்பு
பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சரை நேரில் சந்தித்து மகஜரைக் கையளித்ததன் பின்னர் குறித்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்திய இம்ரான் எம்.பி தெரிவிக்கையில்,
கடந்த சில வருடங்களாக பகல் 11.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு புறப்பட்டு வந்த கடுகதி ரயில் சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இச்சேவையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
தமது உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லும் ஏழை விவசாயிகளும், கொழும்புக்கு வைத்திய சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் இந்த ரயில் சேவையை அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர்.
இதனைவிட திருகோணமலைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளும் அதிகளவில் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த சேவை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், உல்லாசப் பிரயாணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே, இந்த ரயில் சேவையை மீள ஆரம்பிக்க வேண்டுமென அமைச்சரின் கவனத்திற்கு இம்ரான் எம்.பி கொண்டுசென்றார்.
இவற்றை செவிமடுத்த அமைச்சர் விரைவில் இது குறித்த நல்ல தீர்மானம் ஒன்றுக்கு வருவதாக வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.