Our Feeds


Friday, February 28, 2025

Zameera

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மாயம்


 ‘‘காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, அதற்காக 144 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பான விசாரணை அறிக்கைகள் காணாமலாக்கப்பட்டுள்ளது’’ என ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


மேலும், 2016ஆம் ஆண்டு முதல் பெரும் பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப் பட்டு இவற்றுக்காக 5,301 இலட்சம் ரூபா செலவிடப்பட் டுள்ளபோதும் அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பாராளுமன்றத்தில் நேற்று(27) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


‘‘நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் நடந்தால் உடனடியாக அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பார்கள். ஆணைக்குழு அமைக்கப்பட்டது ஒரு செய்தியாக பிரசாரப்படுத்தப்படும். ஆனால், குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் எதுவும் வெளிவராது.


2016ஆம் ஆண்டுமுதல் பிரதானமாக 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக 662.34 இலட்சம் ரூபா செலவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இறுதியில் இந்தக் குழுவின் அறிக்கையும் வெளிவரவில்லை. காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதற்கும் 144.56 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை கிடைக்க வில்லை. அதுவும் காணாமலாக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிர்த்த ஞாயிறு தினத் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவுக்கு 1063 இலட்சம் ரூபா, ஊழல் எதிர்ப்பு காரியாலயத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு 350 இலட்சம் ரூபா, அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை குழுவுக்கு 842 இலட்சம் ரூபா, சுங்கத் திணைக்களம் மீதான குற்றச்சாட்டை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவுக்கு 318 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் செலவிடப்பட்டுள்ளது.


நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுக்களுக்காக மொத்தமாக 5,301 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுக்கள் முறையாக அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. ஆனால், 2022 மே 09 சம்பவம் தொடர்பில் மாத்திரம் துரிதமாக விசாரணை செய்து, துரிதமாக அறிக்கை சமர்ப்பித்து நஷ்டஈடும் செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »