எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதன்மை நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.
உரிய அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்திலும் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கமைய, தேவையான பாதுகாப்பை வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும், உறுப்பினர்களுக்குக் காணப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தற்போது ஆராய்ந்து இறுதி அறிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேவையெனின், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர், பிரதானமாக போதைப்பொருள் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு பாதாள உலக செயற்பாடுகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படும் இந்தப் பாதாள உலக செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கைது செய்து, நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் குறைக்கப்படும் என்று தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த குழுவின் தலைவர், வரவுசெலவுத்திட்டத்தில் சதவீத அடிப்படையில் சம்பளக் குறைப்பு காட்டப்பட்டாலும், எந்த அதிகாரியினதும் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என்றும், நிச்சயமாக சம்பள உயர்வு மட்டுமே ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரச சார்பற்ற நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் திட்டங்களை முறையான ஒழுங்குமுறையுடன் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல, பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Monday, February 24, 2025
அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »