வரவு செலவு திட்டத்தில் 2200 பில்லியன் ரூபா துண்டு விழும்தொகையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என எந்த விடயமும் தெரிவிக்கப்படாமல் இருப்பதுடன் அரசாங்கத்தின் இலக்கை அடைந்துகொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் அரசாங்கம் தெளிவாக குறிப்பிடவில்லை. ரணில் விக்ரமசிங்க சட்டத்துக்கு உட்பட்டு தயாரித்துள்ள சட்ட ரீதியான வழியில் அரசாங்கம் செல்லாவிட்டால் பாரிய பேரழிவுக்கு முகம்கொடுக்க நேரிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரவு செலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பதே நாங்கள் சிந்திக்க வேண்டிய பிரதான விடயமாகும். அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள வரவு செலவு திட்டத்தில், வரவு செலவு துண்டுவிழும்தொகையை தீர்த்துக்கொள்வதற்கு 2200 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. அப்படியானால் அந்த தொகையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்ற விடயம் இந்த வரவு செலவு திட்ட அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
உதாரணமாக வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தவிர, வேறு விடயங்களை தெளிவாக புரிந்துகொள்ள கிடைப்பதில்லை. வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய விடயம்தான்,வரவு செலவு திட்டத்தில் எத்தனை முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டாலும், அதில் எத்தனை வெற்றி பெற்றுள்ளன? அவ்வாறு இல்லாமல் எத்தனை அழகான கதைகள் இருந்தாலும், அந்த அழகான கதைகளை எப்படி யதார்த்தமாக்குவது என்ற சவால், அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் உள்ள பிரதான சவாலாகும். இதன் மூலமே அரசாங்கம் வெறியடையும் அல்லது தோல்வியடையும்.
அதனால் இலங்கை பிரஜைகளாக பார்ப்போமானால், சுதந்திரத்துக்கு பின்னர் 76 வருட காலத்துக்குள் வடக்கில் டொலர் பில்லியன் கணக்கில் அங்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோன்று தெற்கிலும் பாரிய சேதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்கிறது. எவ்வாறு இருந்தாலும் அவ்வாறான ஒரு அணி தற்போது இந்த நாட்டை நிர்வகிப்பதன் மூலம் நாட்டுக்கு நல்லது நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது. கடந்த கால வீழ்ச்சியடையும் செயற்பாடுகள் இல்லாமல் அவர்கள் இந்த ஆட்சியில் பங்காளியாகுவது மிகவும் முக்கிய நடவடிக்கையாகவே ஐக்கிய தேசிய காண்கிறது.
2015இல் நாங்கள் ஆட்சியை பெற்றுக்கொள்ளும்போது அலுவலக பணி உதவியாளர்களின் அடிப்படைச்சம்பளம் 11726 ரூபாவாகும். மீண்டும் 2024ல் நாட்டை பொறுப்பளிக்கும்போது அவர்களுக்கு அடிப்படைச்சம்பளத்துடன் 24250 ரூபா கிடைக்கப்பெற்றது. அதேபோன்று கேஸ், பெட்ரோல் விலை அதிகரித்துள்ள நேரத்தில், 2015 ஜனவரி 8ம் திகதி நாட்டை பொறுப்பெற்று 100 நாட்களில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கி, வழங்கப்படும் நிவாரணங்களை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கி, கடனை எப்படி அடைப்பது, கடனை எப்படி பெறுவது என்ற இரண்டு விடயங்களையும் ஒப்பிட்டு பார்த்துதான் பொது மக்களுக்கும் ஒட்டுமொத்த அரச துறைக்கும் நிவாரணம் வழங்கினோம்.
2015இல் பட்டதாரி தாதியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படைச்சம்பளம் 15620 ரூபாவாகவே இருந்தது. 2020ஆகும்போது அவர்களின் அடிப்படைச்சம்பளம் 32525 ரூபா வரை எடுத்துச்சென்றோம். அரச துறையில் சம்பளம் அதிகரிக்கும்போது முரண்பாடுகள் ஏற்படாதவகையில் அதிகரிக்கப்பட வேண்டும். கடந்தகால சம்பள ஆணைக்குழுவின் பழைய அறிக்கை மறற்றும் தற்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு அறிக்கையை பார்த்தால் பாரிய பிரச்சினை ஒன்று ஏற்படும் நிலையே காட்டுகிறது.
அரசாங்கத்தின் இந்த சம்பள அதிகரிப்பால் ஒட்டுமொத்த அரச துறையும் பாரிய பேரழிவுக்கு முகம்கொடுத்து இருக்கிறது. அதனால் குறிப்பிட்டதொரு தொகை சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளும்போது, படிப்படியாக அனைத்து துறைகளும் உள்வாங்கும் வகையில் அது இடம்பெறாவிட்டால் அது பாரிய பிரச்சினையாக மாறும். என்றாலும் அவ்வாறு எந்த பிரச்சினையும் ஏற்படாது என அரசாங்கம் தெரிவிக்கிறது. அப்படியானால் அரச துறையும் தனியார் துறையும் அமைதியான முறையில் செயற்படும். ஆனால் நாங்கள் தெரிவிப்பது உண்மை என்றால் அது வேறு விதத்தில் செயற்படும்.
எனவே வரவு செலவில் காணப்படும் ஏற்றத்தாழ்வு அவ்வாறே தொடர்ந்து முன்னுக்கு சென்றால் இந்த நாடு நிச்சயமாக விழ்ச்சியடையும். அதனை நாங்கள் கோபத்திலாே பொறாமையிலாே தெரிவிப்பதில்லை. ரணில் விக்ரமசிங்க சட்டத்துக்கு உட்பட்டு தயாரித்துள்ள சட்ட ரீதியான வழியில் அரசாங்கம் செல்லாவிட்டால் பாரிய பேரழிவுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றார்.