Our Feeds


Saturday, February 22, 2025

Sri Lanka

தமிழ் மக்களை ஏமாற்றினால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் - சாணக்கியன் எச்சரிக்கை!


படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும்,எம்மை நாம் ஆளும் அரசியல் தீர்வும் வேண்டும் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. புதிய  அரசியலமைப்பு உருவாக்கத்தை தாமதப்படுத்துவது  இந்த நாட்டை  மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். மக்களை ஏமாற்றினால் கோட்டபய ராஜபக்ஷவை காட்டிலும் மிக  மோசமான விளைவை  அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்  என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22)  நடைபெற்ற   2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் ஊடாக பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 58சதவீதமளவில் தான் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒதுக்கீடுகளின் செயலாற்றுகையை விளங்கிக் கொள்ளமுடியும்.

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு  பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முல்லைத்தீவு வட்டுவாக்கல்  பாலத்தை  நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மாகாண மக்கள் பெருமளவில் வாக்களித்தார்கள். ஆனால்  மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 6 சதவீதமான அளவு தான் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வரவு, செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடுகள் வரவு, செலவுத் திட்ட பதிவுகளில் இருக்கும் ஆனால் நடைமுறையில் ஏதும் நடக்காது. குறைந்தளவான நிதியை ஒதுக்கி வடக்கு மாகாண மக்களைஏமாற்றலாம் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைக்க கூடாது.

வடக்கு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். காணாமல்  போனோரின் உறவுகள் 2,900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்துக்கு ஒரு முன்மொழிவை கூட இதுவரையில் முன்வைக்கவில்லை.

இந்த நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். பட்டியலை தருமாறு என்னிடம் கேட்கிறார். இந்த நாட்டில் நான் நீதியமைச்சரா அல்லது அவர் நீதியமைச்சரா, வடக்கில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் பொறிமுறை வகுக்கப்படவில்லை.

அபிவிருத்திகளை செய்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று கருத வேண்டாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோடிக்கணக்கில் அபிவிருத்திகளை செய்தார். ஆனால் அவரால் கூட பிரச்சினைகளுக்கு  தீர்வு காண முடியவில்லை. நிலையான அரசியல் தீர்வு ஊடாக மாத்திரமே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.இதற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தக்க பதில்  அரசாங்கத்துக்கு கிடைக்கும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை  புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்த முடியாது  என்று குறிப்பிடப்படுகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்காமல் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேசிய மற்றும் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல்  முன்னேற முடியாது. தேசிய உற்பத்தியை மேம்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் எமது மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தீர்வினை தாருங்கள். பசுக்களை கொலை செய்யப்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் எமது மக்கள்  பண்ணைத் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

வரவு, செலவுத் திட்டத்தில்  புதிதாக ‘பிம்சவிய’ திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டுகாலப்பகுதியின் வனவளத்துறை வரைப்படத்தை அமுல்படுத்தினால் எமது மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொல்லியலாளர்கள் எமது மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளார்கள். இந்த அரசாங்கத்திலும் இந்த நிலையே காணப்படுகிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதி மீது நம்பிக்கை கொண்டே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது. தேசிய மக்கள்  சக்திக்கு  ஆதரவளித்தது தவறு என்பதை  வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »