வரவு செலவுத் திட்ட உரையில் மலையகம் என்று குறிப்பிடுவதால் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. பொருளாதார மேம்பாட்டின் பிரதான பங்காளர்களாக மலையக மக்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை 200 ஆண்டுகளாக லயன் அறையில் பின்தங்கியுள்ளது. அதிக நிதியை ஒதுக்கி அந்த மக்களை லயன் அறையில் இருந்து வெளியேற்றி கௌரவமாக வாழும் சூழலை ஏற்படுத்துங்கள் . இதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை முழுமையாக பரிசீலனை செய்ததன் பின்னர் இது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதீடு என்பதை விளங்கிக் கொண்டேன். ஆகவே இது யாருடைய பாதீடு என்பது பிரச்சினைக்குரியது.
1970 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் என்.எம். பெரேரா அக்காலக்கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கைக்கு முரணாகவே வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார். அதேபோல் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
அப்போதைய நிதியமைச்சர் ரொனில் டி சில்வா 1970 மற்றும் 1976 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கைக்கு எதிரான வகையில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தை பிறிதொரு நகலையே நிதியமைச்சர் அநுரகுமார திசாநாயக்க தற்போது சமர்ப்பித்துள்ளார்.
76 ஆண்டுகால சாபம் பற்றி ஆளும் தரப்பினர் அன்றும் பேசினார்கள்,இன்றும் பேசுகிறார்கள். 1947 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் விவசாய பிரச்சினையே காணப்பட்டது. நாட்டின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு போதுமான அளவில் தான் தேசிய மட்டத்தில் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. அரிசி உற்பத்தியை தன்னிறைவடைய செய்வதற்காகவே கல்லோயா திட்டம் உருவாக்கப்பட்டது.இந்த திட்டம் இல்லாவிடின் இன்று அம்பாறை புதிய நகரம் என்பதொன்று தோற்றம் பெற்றிருக்காது.
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியின் ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு நீண்டகால திட்டங்களை அறிமுகப்படுத்தினர். 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் விவசாயம் , கைத்தொழில் உள்ளிட்ட துறைகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அடிக்கடி பொருளாதார கொள்கையை மாற்றியமைத்தன. நாட்டின் முன்னேற்றத்துக்காக அரசாங்கங்கள் வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்த போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தின.
1981 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணி திராவிட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து மனித படுகொலைகளை ஊக்குவித்தது. இதனால் நாட்டின் மனித வளம் மாத்திரமல்ல, பொருளாதார வளமும் இல்லாதொழிந்தது. ஆகவே 76 ஆண்டுகால வீழ்ச்சிக்கு இதுவும் பிரதான காரணம் ஆகவே தொடர்ந்து 76 ஆண்டு காலத்தை சாபம் என்று சபிக்காதீர்கள்.
வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் குறித்து அதிக கரிசனை கொள்ளப்பட்டுள்ளது. யாழ் நூலக அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றதொன்றாகும்.தமிழ் மக்கள் இதனை காட்டிலும் பாரியதொரு விடயத்தை எதிர்பார்த்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் 13 பிளஸ் அதிகார பகிர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளித்தது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா, யாழ் நூலக அபிவிருத்தியை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கு அப்பாற்பட்டு அரசிலமைப்புடன் அதிகார பகிர்வை கோருகிறார்கள். இதற்கான நடவடிக்கைகளை எடுங்கள்.
பெருந்தோட்ட மக்களை நோக்கி ' மலையகம் ' என்ற சொல்லை பிரயோகித்து அந்த மக்கள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. மாற்று கொள்கையை அமுல்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் மலையக மக்களை லயன் அறையில் இருந்து விடுவிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்.மலையக மக்கள் எதிர்கொள்ளும் துயரத்தை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்.
வரவு செலவுத் திட்ட உரையில் மலையகம் என்று குறிப்பிடுவதால் மாத்திரம் அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் பிரதான பங்காளிகளாக மலையக மக்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை கடந்த 200 ஆண்டுகளாக பின்தங்கியுள்ளது. ஆகவே லயன் அறை முறைமையை நீக்கி, அந்த மக்களின் வாழ்க்கையை கௌரவமாக்குங்கள் அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.