எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பற்றிய கலந்துரையாடலொன்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தலைமையகமான தாருஸ் ஸலாத்தில் நேற்று (17) நடைபெற்றது.
இதன்போது கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். நழீம், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோர் உட்பட, கொழும்பு மாவட்ட மத்திய குழுவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கமிட்டியினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குபற்றி தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
அடுத்த சில நாட்களில் தமது கட்சியைப் பொறுத்தவரை கொழும்பு மாவட்டத்திலும், நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் மாநகர சபைகளுக்கும், பிரதேச சபைகளுக்குமான பிரஸ்தாப தேர்தலுக்கு முகம் கொடுப்பதில் முன்னேற்றகரமான முடிவுகள் எட்டப்படுமென தலைவர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு அண்மையில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர்களில் ஒருவரான முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சார்பில் கட்சியின் தலைவர் சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் அங்கு பலமான வாதங்களை முன்வைத்திருந்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பை சபாநாயகர் வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (17) மாலை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகர் அதற்கு ஒப்பமிட்டுள்ளதோடு, அவசர அவசரமாக உத்தேச தேர்தல் நடத்தப்படுவதில் ஆளும் தரப்பு முனைப்பாக இருப்பதை அறிய முடிகின்றது.
இவ்வாறிருக்க, இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாட இன்று (18) முற்பகல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும் தேர்தல் திணைக்களத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.