Our Feeds


Wednesday, March 5, 2025

Zameera

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் உறுதி


 சம்பள நிர்ணய சபையுடனான கடந்தகால பேச்சுவார்த்தைகளைப் போலன்றி, தற்போது அது தொடர்பாக முறையான இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை  பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும் எனவும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின்போது, வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, கடந்த முறையும் சம்பள நிர்ணய சபையே இந்த தீர்மானத்தை எடுத்தது. எனினும், அது நடைமுறைக்கு வரவில்லை. அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700   ரூபாய் அடிப்படை சம்பளமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இராதாகிருஷ்ணன் எம்.பி கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,
அது உண்மை. அப்போது அந்த சம்பள அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை நாம் அறிவோம். அதனால்தான் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டையும் எட்டியுள்ளோம்.

அந்தவகையில், 1,350 ரூபாய் அடிப்படை சம்பளம், ஏனைய 350 ரூபாய் அவர்கள் எடுக்கும் கொழுந்து கிலோவை அளவிட்டு வழங்கப்படும். அதன்படி, அவர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் கிட்டும்.

சில தோட்ட நிறுவனங்கள் இதற்கு இணங்காவிட்டாலும் பெரும்பான்மையான நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 25 நாட்கள் தொழில் வழங்குமாறு நாம் தோட்ட நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

1,700 ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்குவதனால் நாமும் அதனை வரவேற்கிறோம்.

அந்தவகையில், நூற்றுக்கு 80 வீதம் 1,350 ரூபாய் உடன் மேலும் 350 ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும் என தோட்டக் கம்பெனி நிறுவனங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.

அந்த 350 ரூபாவை உறுதியாக பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தின் மூலம் எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »