தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக ஒரு தம்பதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று, வியாழக்கிழமை(மார்ச் 06) மரண தண்டனை விதித்தது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சுஜீவா நிசாங்கா தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி, கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட மாளிகாவாத்தையை சேர்ந்த முகமது அலி முகமது உஸ்மான் மற்றும் முகமது பாஹிம் பாத்திமா சிபானா ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட வழக்கு
மாளிகாவத்தை பகுதியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி அல்லது அதனை ஒட்டிய காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
நீண்ட காலம் நீடித்த இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி சுஜிவா நிசாங்கா, பிரதிவாதிகளுக்கு எதிரான கொலைக் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படாமல் புதைக்கப்படவிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி நடத்தினர்.
தொடர்புடைய இடத்தில் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து குழந்தையின் மரணத்திற்கு காரணத்தை அறிய உடற்கூறாய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் மருத்துவ அறிக்கை குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருப்பதை காட்டுவதாக நீதிபதி கூறினார்.
உடலில் காயங்கள்
குழ்ந்தையின் உடலில் சுமார் 90 காயங்கள் காணப்பட்டன. அவை தீக்காயங்கள் மற்றும் தாக்கியதால் ஏற்பட்டவை என மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையின் விரைப்பைகள் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் மருத்துவ அறிக்கை காட்டியது.
அதன்படி, அந்த குழந்தை கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகப்பட்டிருப்பதாகவும், அதன் மரணம் திட்டமிட்ட வன்முறையால் நிகழ்ந்தது மருத்துவ ஆதாரங்கள் மூலம் தெரியவருவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
குழந்தையின் மரணம் நீண்ட காலமாக ஏற்படுத்தப்பட்ட தீக்காயங்களால் ஏற்பட்டதாக தடயவியல் மருத்துவ அதிகாரி முடிவு செய்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயிரிழந்த குழந்தையை முதலில் கொழும்பு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும், பின்னர் அங்கு அனுமதிக்காமல் கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவரிடம் கொண்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
குழந்தை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பராமரிப்பில் இருந்ததற்கு போதிய ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக எந்த சந்தேகமும் எழவில்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இறந்த குழந்தை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பராமரிப்பில்தான் வாழ்ந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் தடயவியல் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் அடிப்படையில் குழந்தையின் இறப்புக்கு குற்றம்சாட்டப்பட்டவர்களே பொறுப்பு என நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதன்படி அவர்கள் இருவரும் கொலைக் குற்றவாளிகள் என நீதிபதி கூறினார்.
தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன்பாக நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
தனக்கு வேறு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் இந்த குழந்தையை தனது சொந்த விருப்பத்தின்படியே தத்து எடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தம்மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர் நீதிமன்றத்தில் கூறினார்.