என்னை ‘தொந்தி வயிற்றுக்காரன்’ என்று கோப் குழுவில்
அவமதிக்கும் வகையில் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் நடந்துகொண்டுள்ளார் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சபாநாயகரி டம் முறையிட்டார்.பாராளுமன்றத்தில் நேற்று (18) சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தே சாமர சம்பத் எம்.பி. இதனைக் கூறினார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘மார்ச் 06ஆம் திகதி கூடிய கோப் குழுவில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் இரத்தினக்கல் பொதியொன்று தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது, கோப் குழுவின் உறுப்பினர் ஒருவரால், ‘‘பதுளையில் உள்ள தொந்தி வயிற்றுக்காரன் கனவிலும் கூறவில்லையா’’ என்று கேட்கப்பட்டுள்ளது. அந்த முக்கியமான குழுவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பியொருவரால் இவ்வாறு கேட்கப்பட்டுள்ளது. இது மிகவும் அவமதிக்கும் முறையற்ற விடயமாகும்.
பெருத்த உடல், வயிற்றை கொண்ட ஒருவரை பாராளுமன்றம் அனுப்பியமைக்காக எனது மக்களுக்கு நன்றியைக் கூறிக்கொள்வதுடன், இவ்வாறான உடலை கொண்டுள்ளேன் என்பதனை நான் பெருமையுடன் கூறுகின்றேன். பதுளையில் வேறு தொந்தியுடையவர்கள் எவரும் இல்லையே. நான் மட்டும்தானே இருக்கின்றேன். இவ்வாறு அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம்.
கோப் குழுவில் எமது உறுப்பினர்கள் எவரும் இல்லை. ஆளுங்கட்சியினரே இருக்கின்றனர். எப்படி அங்கே நடந்துகொள்ள வேண்டும் என்று கோப் குழு உறுப்பினர்களை அழைத்து தெளிவுபடுத்துங்கள். இது எனது வயிறே. இதனை வெட்டி அகற்ற முடியாது. அதனை குறைக்க நான் முயற்சித்தாலும் அது குறையாமைக்கு நான் என்ன செய்வது? இது கடவுள் கொடுத்தது’’ என்றார்.