Our Feeds


Monday, March 10, 2025

Zameera

அரச வைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக மருந்துகள் வழங்கப்படும் –அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ


 அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் மருந்து விநியோகம் தொடர்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார மற்றும் மருந்து விநியோகம் என்பன இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய துறைகளாக உள்ளன. ஆகையால் அவற்றுக்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை. இத்துறைகளில் கடமையாற்றுபவர்களின் பொறுப்புணர்வு, ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை அத்துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடு தொடர்பிலும் தொடர்ச்சியாக கண்காணிப்பதுடன், அதன் விளைவுகள் தொடர்பில் ஆராய்வதும் அவசியமானதாகும்.

இதன் மூலம் மருந்து விநியோகச் சங்கிலியை தொடர்ச்சியாக பராமரிக்க முடியும். சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சில சூழ்நிலைகளில் சவலான நிலைமைகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். எனினும் பொதுமக்களுக்கு உயர்தரமான சுகாதார சேவையை வழங்க வேண்டும், என்ற எமது முதன்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதில் எவ்வாறான சவால்கள் எழுந்தாலும், அவற்றுக்கு சரியாகவும் நேர்மையாகவும் முகம் கொடுப்பதன் மூலம் வெற்றிகரமாக முறியடிக்க முடியும். மருந்துத் துறையில் நிலவிவரும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

அத்தோடு எதிர்வரும் காலங்களில் அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வரலாற்றில் சுகாதார துறைக்காக, இவ்வாண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திலேயே மிகப்பெரிய தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்பணத்தை முறையாகவும் திட்டமிட்ட முறையிலும் பயன்படுத்தி, இந்த நாட்டு மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சுக்கு தலைமை தாங்கி செயற்படுவேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »