Our Feeds


Saturday, March 8, 2025

Zameera

ஜனாதிபதியின் மகளிர் தின செய்தி


 சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது எனவும் அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்குப் பல வெற்றிகளை அடையத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளமையை நினைவூட்ட விரும்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல தசாப்தங்களாக கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பங்கேற்பு மற்றும் வகிபாகத்தை அதிகரித்து, கடந்த பொதுத் தேர்தலில் 22 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நீதியான சமூகம், சுதந்திரமான நாடு, சுதந்திரமான பெண்கள் என்ற அபிலாஷைகளை அடையும் வகையில் வீடு, போக்குவரத்து, சமூகம், தொழிலிடம் மற்றும் அரசியல் உட்பட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் போன்ற பெண்களின் தனித்துவமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரச கொள்கைகளை வகுப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, ” சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம்,உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ் ” நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் ” என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதிலுள்ள அர்த்தம் மற்றும் நடைமுறைச்சாத்தியம் என்பனவற்றை நினைவூட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »