Our Feeds


Saturday, March 1, 2025

Zameera

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்


 இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இலங்கை சபாநாயகரை பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் தேசிய சட்டப் பேரவையின் சபாநாயகரின் அழைப்பிதழை உயர்ஸ்தானிகர் பாஹீமுல் அஸீஸ் இதன்போது சபாநாயகரிடம் கையளித்தார்.

குறிப்பாக வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பலதரப்பு மட்டங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது நன்றியைத் தெரிவித்தார்.

பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும் தெற்காசிய பிராந்தியங்களின் முதலாவது ஒன்றிணைந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு லாகூர் சென்றதை நினைவுகூர்ந்த சபாநாயகர், அந்தப் பயணத்தின் போது பாகிஸ்தான் அரசாங்கத்தின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், புத்தரின் புனித நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பது மற்றும் பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பாகிஸ்தானின் பங்களிப்புக்களை சபாநாயகர் பாராட்டினார்.

இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபித்தல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்ககள் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »